நைஜீரியாவின் தலைநகர் அபுஜாக்கு அருகே உள்ள சுலேஜாவில் புதன்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழையால், அங்குள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 118 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம், நைஜீரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சிறைத்துறை செய்தித் தொடர்பாளர் அடமு துசா வெளியிட்ட அறிக்கையில், “நைஜீரியாவின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. புதன்கிழமை இரவிலும் பல மணி நேரம் கனமழை பெய்தது.

இதனால் நைஜர் மாநிலத்தின் சுலேஜா நகரில் உள்ள சிறைச்சாலையின் பாதுகாப்பு வேலி, சில பகுதிகளில் உள்ள சுற்றுச் சுவர்கள் கடுமையாக சேதமடைந்தன. இதனை பயன்படுத்தி சிறையில் இருந்து 118 கைதிகள் தப்பி ஓடினர். இந்த தகவல் அறிந்து உடனடியாக சிறைக்கு விரைந்த போலீசார் சிறைச்சாலையின் சேவை முகவர்களுடன் சேர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் 10 கைதிகள் பிடிபட்டனர். மேலும் மீதமுள்ளவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த சூழல் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். பொதுமக்களுக்கு சந்தேகத்திற்குரிய நடமாட்டம் குறித்த சந்தேகம் ஏற்பட்டால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார். தப்பியோடிய கைதிகளின் பற்றிய விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை என்றாலும், போகோ ஹராம் இஸ்லாமிய கிளர்ச்சிக் குழு உறுப்பினர்களே பெரும்பாலும் சுலேஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

சுலேஜா நகர எல்லையில் பரந்த காடுகள் இருப்பதால் கைதிகள் அங்கு தப்பி ஓடி காட்டுக்குள் மறைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நைஜீரியாவில் உள்ள பெரும்பாலான சிறைச்சாலைகள் பழைமையானவை, 1960-ம் ஆண்டு பிரிட்டனில் இருந்து மேற்கு ஆப்பிரிக்க நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு காலனித்துவ காலத்தில் கட்டப்பட்டவை. எனவே அங்கு கட்டமைப்புகள் அரிதாகவே புதுப்பிக்கப்படுகின்றன.
இதனால் பலமுறை தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான கைதிகள் தப்பியோடியுள்ளனர், குறிப்பாக தலைநகர் அபுஜாவில் உள்ள உயர் பாதுகாப்பு சிறை மீது ஜூலை 2022-ல் இஸ்லாமிய அரசு நடத்திய தாக்குதலால் 440 கைதிகள் சிறைகளிலிருந்து தப்பினர். எனவே தற்போது 3,000 பேர் அடைக்கும் திறன் கொண்ட ஆறு சிறைச் சாலைகள் கட்டப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.