சென்னை: உள்நாட்டு விமானத்தில் தங்கல் கட்டிகள் கொண்டு வரலாமா என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து சுங்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், மதுரையைச் சேர்ந்த சையத் இப்ராஹிம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் இருந்து விமானத்தில் 497 கிராம் தங்கத்தை எடுத்து வந்தேன். அப்போது சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் என்னை பிடித்தனர். பெங்களூருவில் நகைகள் செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லாததால் அங்கிருந்து சென்னைக்கு தங்கத்தை கொண்டு வரும்போது அதிகாரிகள் பிடித்தனர்.
சுங்கப் பொருட்கள் சட்டத்தின்படி வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கொண்டு வந்தால் மட்டுமே பறிமுதல் செய்ய சட்டம் அனுமதிக்கிறது. உள்நாட்டில் தங்கத்தை எடுத்து வர சட்டம் அனுமதி வழங்கியிருக்கிறது.
மேலும், மனைவி மற்றும் தாயின் 709 கிராம் பழைய நகைகளை கொடுத்து, ஜிஎஸ்டி செலுத்தி வாங்கிய தங்கம்தான் அது என்று கூறி ஆவணங்களை சமர்பித்தேன். ஆனால், அதிகாரிகள் அதைக் கேட்கவில்லை. தங்கம் விமானத்தில் கொண்டு வருவது தடை செய்யப்படவில்லை. வணிக ரீதியான பயன்பாட்டுக்காக தான் தங்கம் எடுத்து வரவில்லை. எனவே, அதிகாரிகளால் கைபற்றப்பட்ட தனது தங்கத்தை விடுவிக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.கே.ஜெயராஜ், “கைப்பற்றபட்ட தங்கத்துக்கான அசல் ஆவணங்களை அதிகாரிகள் வழங்கவில்லை. தங்கம் கைபற்றப்பட்டால் அபராதம் மட்டுமே விதிக்க சட்டம் அனுமதித்தும். ஆனால், அதிகாரிகள் அதை மீறியுள்ளனர். எனவே, மனுதாரரின் தங்கத்தை விடுவிக்க உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உள்நாட்டு விமானத்தில் தங்க கட்டிகள் கொண்டு வரலாமா என்று கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், மனுதாரரின் கோரிக்கை மீது ஒரு மாதத்தில் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சட்டத்துக்கு உட்பட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜூன் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.