புதுடெல்லி: இத்தாலியின் புக்லியாவில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பினை, பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்றுக் கொண்டார். இதற்காக, அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் விடுதலை தினத்தன்று வாழ்த்து தெரிவிக்க பிரதமர் மோடி இத்தாலி பிரதமர் ஜார்ஜியாவை தொடர்பு கொண்டபோது இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் நடந்து வரும் சூழ்நிலையில் பிரதமர் மோடிக்கு இத்தாலி அழைப்பு விடுத்துள்ளது உலக நாடுகள் அவருக்கு ஆதரவளிக்கும் மதிப்பீடாகவே பார்க்கப்படுகிறது.
இத்தாலி பிரதமருடனான உரையாடலின்போது, இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாகவும், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இந்தியாவின் தலைமையிலான ஜி20 கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இத்தாலி தலைமையின் கீழ் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டுக்கும் எடுத்துச் செல்வது குறித்து இருநாட்டு பிரதமர்களும் ஆலோசனை நடத்தினர்.
மக்களவை தேர்தல் முடிவுக்குப் பிறகு ஜூன் 13-15 தேதிகளில் ஜி7 உச்சி மாநாடு இத்தாலியில் நடைபெறவுள்ளது.