லக்னோ: பிஹார் மாநிலத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்கு பேருந்தில் சட்டவிரோதமாக அழைத்துவரப்பட்ட 95 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிறு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது அவர்கள் பெற்றோரின் ஒப்புதல் அவசியம். ஆனால் அப்படியான ஒப்புதல் ஏதுமில்லாமல் சட்டவிரோதமாக அழைத்துச் சென்றதால் அவர்கள் கடத்தப்பட்டனரா என்ற கோணத்தில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பிஹார் மாநிலம் ஆராரியா பகுதியிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு இரண்டு அடுக்குகள் கொண்ட பேருந்து ஒற்றில் 95க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தி செல்லப்படுவதாக குழந்தைகள் நல ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, உபி குழந்தைகள் நலவாரியத்தின் தலைவர் பகிர்ந்த தகவலின் அடிப்படையில் குழந்தைகள் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து உபி குழந்தைகள் நலவாரியத் தலைவர் சர்வேஷ் அவஸ்தி அளித்தப் பேட்டியில், “வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் உபி குழந்தைகள் நலவாரிய உறுப்பினர் சுசித்ரா சதுர்வேதி என்னை அழைத்தார். பிஹாரில் இருந்து குழந்தைகள் சஹரான்பூருக்கு கடத்தப்படுவதாக தகவல் வந்துள்ளது. அவர்கள் தற்போது கோரக்பூர் வழியாக சென்று கொண்டிருக்கிறார்கள் என்றார். உடனே நாங்கள் காவல்துறை உதவியை நாடினோம். சஹரன்பூர் பகுதியில் உள்ள தேவ்காலி புறவழிச் சாலையில் அந்த பேருந்தை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் மற்றும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பேருந்துக்குள் 95 சிறுவர்கள் இருப்பது தெரியவந்தது.
குழந்தைகளுக்கு 4 முதல் 12 வயது தான் இருக்கும். அவர்களிடம் விசாரித்தோம். பல குழந்தைகளுக்கும் தாங்கள் எங்கே செல்கிறோம் என்பதே தெரியவில்லை. குழந்தைகளை மீட்டு மருத்துவ உதவிகள் வழங்கினோம். குழந்தைகளின் பெற்றோர் அளித்த சம்மத கடிதம் போல் ஏதும் அவர்களிடம் இல்லை. எனவே குழந்தைகளின் பெற்றோரை தொடர்பு கொண்டுள்ளோம். அவர்கள் வந்தவுடன் குழந்தைகளை ஒப்படைப்போம்” என்றார்.
கடந்த காலத்திலும் இதேபோல் பிஹாரில் இருந்து அழைத்துவரப்பட்ட குழந்தைகள் கோரக்பூரில் மீட்கப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது நினைவுகூரத்தக்கது. தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் தகவலின் பேரில் உபி குழந்தைகள் நல வாரியம் அவர்களை மீட்டது. அப்போது, விசாரணையில் அவர்கள் பிஹாரில் இருந்து பல்வேறு மாநிலங்களில் உள்ள மதரஸாக்களுக்கு அனுப்புவதற்காக கூட்டிச் செல்லப்பட்டது தெரிய வந்தது.