தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னையில் வீசிய மிக்ஜாம் புயலும், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளமும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதில், மாநில அரசின் பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூ.900 கோடி மத்திய அரசு ஒதுக்கியது. இதுகூட மாநில அரசின் நிதிதான், மத்திய அரசு சார்பாக எந்த நிதியும் வரவில்லை தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.
இந்த நிலையில், சென்னை மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்பு என இரண்டுக்கும் சேர்த்து தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூ.275 கோடி மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது. இதற்கான அறிவிப்பில், கர்நாடகாவுக்கு வறட்சி நிதியாக ரூ.3,454 கோடி ஒதுக்கியிருக்கும் மத்திய அரசு, சென்னை மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு ரூ.115 கோடியும், தென்மாவட்ட வெள்ள பாதிப்புக்கு ரூ.160 கோடியும் ஒதுக்கியிருக்கிறது.
இப்படியிருக்க, மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஒருதலைபட்சமாக நிதி ஒதுக்கியிருப்பதாகத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன் தனது X சமூக வளைதளப் பக்கத்தில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல… வறட்சி நிவாரணம் என ரூ.3,454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டுக்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்துக்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ ரூ.38,000 கோடி. பா.ஜ.க-வுக்கு தமிழ்நாட்டின்மீது இருப்பது கோபமல்ல… வன்மம், தீராத வன்மம்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.
அதேபோல், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “எப்போதும் கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே கிடையாதே. குறைத்துதான் கொடுத்திருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோதும், அந்த அமைச்சரவையில் தி.மு.க அங்கம் வகித்தபோதும் கேட்ட நிதி விடுவிக்கப்படவில்லை” என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “யானைப் பசிக்கு சோளப்பொறி போல மத்திய அரசு நிதி ஒதுக்கியிருக்கிறது. வடக்கு ஒரு நீதி தெற்கு ஒரு நீதியா?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார். தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “குஜராத்துக்கு ஓடோடி ஆயிரம் கோடி கணக்கில் நிதி ஒதுக்கிய மோடி தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்திருக்கிறார். தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.
நேற்று நடந்து முடிந்த இரண்டு கட்ட நாடாளுமன்றத் தேர்தலில், கர்நாடகாவில் முதற்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs