விழுப்புரம்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கோடை வெப்பத்தின் தாக்கம் இருப்பதால் பிற்பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது. இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக நீர் – மோர் பந்தல் அமைத்தால் இரண்டு அல்லது மூன்று மண் பானைகளில் தண்ணீரை நிரப்பி, கூடவே தர்பூசணி, நீர் மோர், பழ வகைகள் என திறப்புவிழா நாளன்று வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இன்று விழுப்புரம் நகரில் மாதாகோயில், காந்திசிலை, பழைய பேருந்து நிலையம், நான்குமுனை சிக்னல் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளரான சி.வி.சண்முகம் எம்பி திறந்துவைத்தார்.
பானைகளுக்கு பதிலாக கேன் வாட்டர் வைக்கப்பட்டு, அதன் அருகே சில்வர் டிரம்மில் நீர் மோர், 300 மிலி குளிர்பானம், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் இளநீர், தர்பூசணி, ஆரஞ்சு பழங்கள் வைக்கப்பட்டு இருந்தது. இனி வரும் நாட்களில் கேன் தண்ணீர் தொடந்து வழங்கப்படும் எனத் தெரிகிறது.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்திலும், அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்திலும், பாமக சார்பில் மாம்பழம் சின்னத்திலும் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனால், அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் பானை இல்லாமல் சர்வ ஜாக்கிரதையாக தண்ணீர் பந்தல்களை திறக்கப்பட்டுள்ளது.
இவ்விழாக்களில் நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், மாணவரணி சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் எசாலம் பன்னீர், சுரேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.