இந்த ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர், வரும் ஜூன் 1ம் தேதி முதல் நடைபெறவிருக்கிறது. இத்தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தொடருக்கான தூதர்களாக மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் நட்சத்திரம் கிறிஸ் கெயில், ஓட்டப்பந்தய ஜாம்பவான் உசைன் போல்ட் ஆகியோர் ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங்கையும் இத்தொடருக்கான தூதராக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய யுவராஜ் சிங், டி20 உலகக் கோப்பைத் தொடர் குறித்துப் பேசியிருந்தார். அப்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஓய்வு பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “நாம் நீண்ட நாள்கள் விளையாடி முன்னணி பிளேயர்களாக வலம் வரும்போது நமது வயதைப் பற்றிப் பலரும் பேச ஆரம்பித்துவிடுவார்கள். நமது ஃபார்மை பற்றியெல்லாம் மறந்துவிடுவார்கள். வயதைப் பற்றிதான் பெரிதாகப் பேசுவார்கள்.
விராட், ரோஹித் இருவரும் சிறப்பான பிளேயர்கள். இந்திய அணியின் முக்கிய வீரர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் எப்போது போதும் என்று நினைக்கிறார்களோ அப்போது அவர்கள் தங்களின் ஓய்வு குறித்து முடிவெடுக்கலாம். அது அவர்களுடைய விருப்பம்தான்.
ஆனால் அதே சமயம் டி20 கிரிக்கெட் விளையாட நிறைய இளம் வீரர்கள் வரவேண்டும். அது சீனியர்களின் வேலைப் பளுவை (50 ஓவர்கள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது) குறைக்கும். இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு இன்னும் நிறைய இளம் வீரர்கள் அணிக்குள் வரவேண்டும். அவர்கள்தான் இதற்கு அடுத்த டி20 உலகக்கோப்பையை ஆடவேண்டும்” என்று கூறியுள்ளார்.