நடப்பு ஐபிஎல் தொடரில் கடந்த வியாழனன்று நடைபெற்ற பெங்களூரு – ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் பெங்களூரு அணி வெற்றி பெற்றிருந்தது.
இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக ஒவ்வொரு போட்டியிலும் 200 ரன்களை விளாசி வந்த ஹைதராபாத் அணி, இப்போட்டியில் 206 ரன்களை சேஸ் செய்யும்போது வெறும் 171 ரன்கள் மட்டுமே அடித்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. “நீங்க நம்பலனாலும் அதான் நெசம்!” என்று ஆச்சர்யப்படும் வகையில் பெங்களூரு அணி வெற்றி பெற்றிருந்தது. பட்டிதர், கிரீன் இருவரும் 20 பந்துகளில் முறையே 50 மற்றும் 37 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். விராட் கோலி அரை சதம் அடித்திருந்தாலும் 43 பந்துகளில் 51 ரன்கள் என்பது ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை மிகக்குறைந்த ஸ்ட்ரைக் ரேட்தான்.
இந்த ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் குவித்து வரும் சமயத்தில் விராட் கோலி, இப்போட்டியில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளை மட்டுமே அடித்து மற்ற ரன்களை ஓடியே எடுத்திருந்தார். இப்போட்டியில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 118.60. எல்லா போட்டிகளிலும் விராட் நல்ல ரன்களை தன் அணிக்காகக் குவித்தாலும், அதற்கு அவர் அதிகப் பந்துகளை எடுத்துக் கொள்வதைப் பலரும் விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர், விராட் கோலியின் பேட்டிங் குறித்துப் பேசுகையில், “பெங்களூரு அணி வெற்றி பெற்ற போட்டியில் பட்டிதர் சிறப்பாக ஆடியிருந்தார். ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை அடித்து அணிக்காக ரன்களைக் குவித்திருந்தார். தினேஷ் கார்த்திக், மஹிபல் இருவரும் ரிஸ்க் எடுத்து ரன்களை அணிக்காகச் சேர்க்கின்றனர். ஒரு ரன்கள், இரண்டு ரன்கள் ஓடுவதற்காக வாய்ப்புகள் இருந்தும் அவர்கள் நின்று சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் அடித்து ரன்களைக் குவிக்கின்றனர். ஆனால், விராட் கோலி சிங்கிள், சிங்கிள், சிங்கிள் என ரன்களை ஓடியே எடுக்கிறார்.
இப்போதைக்கு பெங்களூரு அணிக்கு சிக்ஸர்களும், பவுண்டரிகளையும் அதிரடியாக அடித்து ரன்களைக் குவிப்பதுதான் முக்கியம். குறிப்பாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இறங்குபவர்கள் அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்க வேண்டும்.
விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறைந்து கொண்டே வருகிறது. அவர் அணிக்காக அதிரடியாக ஆடி, சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் அடிக்க வேண்டும். அதைத்தான் பெங்களூரு அணி அவரிடமிருந்து எதிர்பார்க்கிறது” என்று கூறியுள்ளார்.