சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பிற்கு சன்ரைசர்ஸ் முத்தையா முரளிதரன் வருகை தந்திருந்தார். “இந்திய ஸ்பின்னர்கள் பந்தை ஸ்பின் செய்ய முயல்வதே இல்லை…” எனும் விமர்சனப் பார்வையோடு அவர் பேசியவை இங்கே.
பெரும்பாலான போட்டிகளில் 200+ ரன்கள் ஸ்கோர் செய்யப்படுகின்றன. பௌலர்களுக்கான இடமே ஆட்டத்தில் இல்லாமல் போய்விட்டதோ?
“அப்படி சொல்ல முடியாது. ஐ.பி.எல் வெறும் இரண்டு மாதங்களுக்குதான் நடக்கிறது. அதைத்தாண்டியும் கிரிக்கெட் இருக்கிறது. இங்கே நிறைய ப்ளாட் பிட்ச்கள் பயன்படுத்தப்படுகின்றன. இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறையும் கூடுதல் பேட்டரைப் பயன்படுத்தும் சௌகரியத்தை கொடுக்கிறது. அதனால்தான் பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இதைக் கவனத்தில் கொண்டு மாற்றங்கள் செய்யப்படலாம். அடுத்த சீசனிலேயே கூட இந்த நிலைமை மாறலாம்.”
நடராஜன் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருப்பாரா?
“நான் வேறொரு நாட்டை சேர்ந்தவன். நான் இந்த விஷயத்தில் பதில் சொல்வது சர்ச்சையாக முடிந்துவிடும். நடராஜன் விக்கெட்டுகள் எடுக்கும்போது மட்டும்தான் அவர் நன்றாக ஆடுகிறார் என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், அவர் கடந்த 5 ஆண்டுகளாகவே நன்றாகத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார். அதனால்தான் அவரிடம் மீடியாக்களின் மீது அதிக கவனம் செலுத்தாதே எனச் சொல்லியிருக்கிறேன். விக்கெட் எடுக்கும்போது அவரைப் பற்றிப் பேசுகிறார்கள். மற்ற சமயங்களில் அமைதியாக இருக்கிறார்கள்.
கடந்த சீசனில் அவருக்கு காயங்கள் இருந்தன. இந்த சீசனில் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். நன்றாக வீசி விக்கெட்டுகளும் எடுக்கிறார். இந்திய அணிக்கு அழைக்கப்படுவாரா எனக் கேட்கிறீர்கள். அதெல்லாம் தேர்வாளர்களைப் பொறுத்தது. ஆனால், நடராஜன் அதற்குத் தகுதியானவர்.”
இந்த சீசனில் ஸ்பின்னர்கள் அவ்வளவு சிறப்பாகச் செயல்படவில்லை. கேப்டன்கள் ஸ்பின்னர்களைச் சரியாக வழிநடத்துகிறார்கள் என நினைக்கிறீர்களா?
“இந்திய ஸ்பின்னர்கள் பந்தை ஸ்பின் செய்யவே நினைப்பதில்லை. அவர்கள் வேகமாக வீசவே நினைக்கின்றனர். பந்தை ஸ்பின் செய்யும் போதுதான் பந்து டீவியேட் ஆகி பேட்டரை ஏமாற்றும். வேகமாக வீசுவது பயிற்சியில் வீசப்படும் Throw Down-களுக்கு ஒப்பானது. பேட்டர்கள் அதை ஆடிப் பழக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் எளிதில் ஸ்பின்னர்களை எதிர்கொண்டு விடுகின்றனர். பேட்டர்களை ஏமாற்றும் வகையில் பந்தை ஸ்பின் செய்ய முயல வேண்டும்.”