DC v MI: தீயாக ஆடிய டெல்லி; விரட்டி விரட்டி தோற்ற மும்பை! – என்ன நடந்தது?

ஹை ஸ்கோரிங் ஆட்டங்கள் ஐ.பி.எல்-இன் வழக்கமாக மாறிவிட்டன. இன்று ஒரு புதிய நாள். புதிய ஆட்டம். ஆனாலும், மாற்றமில்லை. வழக்கம்போல முதலில் பேட் செய்த அணி 250+ ஸ்கோரை அடிக்க சேஸ் செய்த அணி நெருங்கி வந்து தோற்றிருக்கிறது. சேஸ் செய்து தோற்ற அணி மும்பை. டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

DC v MI

டெல்லிதான் முதல் பேட்டிங். ஃப்ரேஸருக்கும் போரெல்லுக்கும் இடையிலான பார்ட்னர்ஷிப் பவர்பிளேயில் மும்பைக்கு மூச்சு விடுவதற்கான அவகாசத்தையே தரவில்லை. கோட்ஸி இதற்கு முந்தைய டெல்லியுடனான போட்டியில் நான்கு விக்கெட்டுகளோடு அணிக்குக் கை கொடுத்திருந்தார். அவருக்கு பதிலாகச் சேர்க்கப்பட்டிருந்த லூக் வுட்டின் ஓப்பனிங் ஓவரே ஃப்ரேஸரால் சேதாரத்துக்கு உள்ளாகி 19 ரன்களைக் கொணர்ந்தது. பதறிய பாண்டியா, பும்ராவைக் கொண்டுவர, அவரது ஸ்லோ டெலிவரி சிக்ஸரைப் பார்த்தது. 19 ரன்களை அந்த ஓவரில் டெல்லி அடித்தது. பும்ரா நடப்புத் தொடரில் வீசிய காஸ்ட்லி ஓவர் இதுதான்.

DC v MI

தினேஷ் கார்த்திக்கின் சிக்ஸர் தந்த வலியைவிட இது சற்று பும்ராவுக்கு அதிகமாகவே வலித்திருக்கும். அதற்கான கம்பேக் ஆறாவது ஓவரில் போரெல்லை தடுத்து நிறுத்தி மூன்று ரன்களோடு முடித்து வைத்தபோது நேர்ந்ததுதான். எனினும் இடையில் பந்துவீசிய மற்ற பௌலர்களை நையப்புடைத்தார் ஃப்ரேஸர்.

மூன்றாவது ஓவரிலேயே அணியின் ஸ்கோர் 50-ஐ எட்ட, ஃப்ரேஸரின் அரைசதம் 15 பந்துகள் வழி அமைத்திருந்தது. உண்மையில் பவர்பிளேவுக்குள்ளாகவே இரண்டுமே சதமிட வாய்ப்புள்ளது என்பது போன்ற அணுகுமுறையோடே ஃப்ரேஸர் ஆடினார். கண்மூடித்தனமான Slogging இல்லை, திறன், டைமிங், ஷாட் செலக்சன் என எல்லாமே ஒரே புள்ளியில் ஒருங்கிணைந்து அவரது பேட்டின் ஸ்வீட் ஸ்பாட்டைச் சந்திக்க பந்து பவுண்டரியை சந்தித்தது.

DC v MI

பவர்பிளேவுக்குள் அதிகமான ரன்களை எடுத்த சாதனையை 2014-ல் ரெய்னா 87 ரன்களோடு நிகழ்த்தினார். அதனை உடைத்து விடும் பயத்தை ஏற்கெனவே டிராவிஸ் ஹெட் காட்டி 84 ரன்களோடு சமாதானமாகி இருந்தார் என்றால் இப்போட்டியில் 78 ரன்களோடு ஃப்ரேஸர் முடித்திருந்தார். போரெல்லும் சப்போர்டிங் ரோலினைச் சிறப்பாகவே செய்து கொண்டிருந்தார்.

DC v MI

ஹர்திக் பாண்டியாவின் ‘ஹிட் மீ’ ரீதியிலான லெக் சைட் டெலிவரிகளை பவுண்டரிக்குத் துரத்தினார். 6 ஓவர்களில் 92 ரன்கள் என்பது 300-ஐ ஸ்கோர் நெருங்கிவிடும் அச்சத்தை மறுபடியும் காட்டிவிட்டது.

ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் போலவே பண்ட் ஹோப்புடனும் பின் ஸ்டப்ஸுடனும் அமைத்த இரு பார்ட்னர்ஷிப்களுமே 200-க்கும் அதிகமான ஸ்ட்ரைக்ரேட்டைப் பார்த்திருந்தன. 8 – 10 ஓவர்கள் அடுத்தடுத்த இரு விக்கெட்டுகள் ரன்ரேட்டைச் சற்றே முடக்கினாலும் அதற்கடுத்த ஓவர்களில் ஓவருக்குப் பத்து ரன்களாவது வருவதை டெல்லி உறுதி செய்தது. மெதுவாகத் தொடங்கிய ஹோப், பின் மெல்ல ஆட்டத்தை முடுக்கியிருந்தார். முதல் 8 பந்துகளில் 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்தவர் அடுத்த 9 பந்துகளில் 29 ரன்களை விளாசியிருந்தார். இடையில் சரிந்த ரன்ரேட்டும் தூக்கி நிறுத்தப்பட்டது. அவரை வீழ்த்தியதைக் கொண்டாடும் மனநிலையில்கூட மும்பையால் நீண்ட நேரம் இருக்க முடியவில்லை. காரணம், ஸ்டப்ஸும் தன் பங்கிற்கு அதிரடி காட்டியதுதான்.

பும்ராவிற்கு அடுத்தபடியாக எந்தளவு கோட்ஸி அணிக்கு உறுதுணையாக இருந்தார் என்பதனை லூக் வுட் வீசிய போட்டியின் 18-வது ஓவர் நிரூபித்திருந்தது.

லூக் வுட்டை டார்கெட் செய்த ஸ்டப்ஸ், ஸ்கூப் மற்றும் ரிவர்ஸ் ஸ்கூப்களின் அணிவகுப்பை நடத்தி மூன்று பவுண்டரிகளையும் ஒரு சிக்ஸரையும் தேற்றினார். இறுதியாக ஸ்லோ பால் மூலமாகக் கட்டுப்படுத்த லூக் வுட் நினைக்க அதுவும் இரு பவுண்டரிகளாகவே மாற்றப்பட்டு ஒரே ஓவர் 26 ரன்களைப் பார்த்தது. இத்தனை நடந்தும் பும்ரா வீசிய 19-வது ஓவர் வெறும் ஆறு ரன்களை மட்டுமே பார்த்தது. யார்க்கர்களை முயன்று லெந்தை மிஸ் செய்து அது லோ ஃபுல் டாஸ் ஆக மாறி இருந்தாலும் சுலபமாக அடிக்கக்கூடிய லைனில் வராததால் ஸ்டப்ஸ் மற்றும் அக்ஸரால் அதனை அடிக்க முடியவில்லை. இருப்பினும் துஷாரா இறுதியாக வீசிய ஓவர் 17 ரன்களைக் கொண்டு வந்து இலக்கு இன்னும் ஒருமுறை 250-ஐ தாண்டுவதை உறுதிசெய்தது.

DC v MI

இந்த சீசனுக்கு முந்தைய 16 சீசன்களில் ஒருமுறை மட்டுமே 250+ ஸ்கோர் வந்திருக்க, நடப்பு சீசனில் மட்டும் அது 9 முறை நிகழ்ந்திருக்கிறது. ஆகமொத்தம் எல்லாமே அஷ்வினின் “Save The Bowlers” ட்வீட்டை நினைவுபடுத்துவதாகவே இந்த இன்னிங்ஸும் இருந்தது.

DC v MI

நடப்பு சீசனில் இதுவரை டெல்லிக்கு ஸ்பின் பௌலிங் பிரச்னையாக இருந்தது இல்லை. அதற்கு குல்தீப்பின் இருப்பு முக்கியக் காரணம் என்றாலும், போன சீசனிலும் நடப்பு சீசனிலும் பேட்டாலும் பங்களிப்பை அளித்து வரும் அக்ஸர் பந்துவீச்சிலும் சோடை போவதில்லை. எனவே ஒட்டுமொத்தமாகவே மிகச் சிறப்பானதாகவே அவர்களது சுழல் படை செயல்பட்டது. பிரச்னை எல்லாம் ரன்களை கசிய விடுவதோடு விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் தடுமாறிய வேகப்பந்து வீச்சுதான். இந்தாண்டு வேகப்பந்து வீச்சை மட்டுமே வைத்துக் கணக்கிட்டால் இரண்டாவது மோசமான எக்கானமி அவர்களுடையதுதான் (11.1), ஆவரேஜோ 34.4. இதனால்தான் தொடக்கத்தில் பல போட்டிகளில் அணி பின்தங்கியது. இப்போட்டியிலும் ரன்களைப் பெரிதாகக் கட்டுப்படுத்த முடியவில்லைதான். முதல் 6 ஓவர்கள் 65 ரன்களை பார்த்தனதான். வொய்டுகளால் சூழப்பட்ட லிஸார்டின் காஸ்ட்லி ஓப்பனிங் ஓவர், கலீல் அஹமத்தின் பந்துகளில் இஷான் கிஷன் ஹாட்ரிக் பவுண்டரி அடித்த இரண்டாவது ஓவர் எனத் தொடக்கம் சற்று தடுமாற்றமாகவே இருந்தது டெல்லிக்கு! இருப்பினும் மூன்று விக்கெட்டுகளை பவர்பிளேயில் வீழ்த்தி, கலீல் மற்றும் முகேஷ் தங்களது கையில் ஆட்டத்தின் லகானைத் திரும்பவும் கொண்டு வந்தனர்.

ரோஹித் தொடக்கத்திலிருந்தே செட் ஆக முடியாமல் அல்லாடினார். ஆனால் சூர்யகுமார் அடித்து ஆடும் மனநிலையில்தான் இருந்தார். ஃபைன் லெக்கிற்கு விரட்டப்பட்ட அந்த ஒன் ஹாண்டட் சிக்ஸர் அதற்கான முன்னோட்டம் காட்டியது. இருப்பினும் இந்த இரு விக்கெட்டுக்களையுமே வீழ்த்திய கலீல் அணிக்குத் தேவையான கிக் ஸ்டார்டைக் கொடுத்தார். 39 பந்துகளில் 71 ரன்களை எடுத்த திலக் வர்மா – ஹர்திக் பாண்டியாவுக்கு இடையிலான பார்ட்னர்ஷிப் கொஞ்சம் டெல்லியைக் கலங்கடித்தது.

இதற்கு திருப்புமுனையாக மாறியது ராஷிக் சலாமின் இரு விக்கெட்டுகள் மேஜிக் ஓவர். அரைசதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவை அவரது ஸ்லோ டெலிவரி ஏமாற்றி வீழ்த்தியது. அதே ஓவரில் நேகல் வடேராவையும் வீழ்த்தி ஆட்டத்தைக் கையகப்படுத்தினார் ராஷிக் சலாம்.

DC v MI

ஐந்தாவது விக்கெட் விழுந்த அந்தக் கட்டத்திலேயே முந்தைய சீசன்களாக இருந்திருந்தால் போட்டி முடிந்தது என்ற தோற்றம் ஏற்பட்டிருக்கும். ஏனெனில் தேவைப்படும் ரன்ரேட் 17-ஐ எட்டிவிட்டது. ஆனால் இந்த சீசனின் டேக் லைனே பேட்ஸ்மேன்களிடம் பெரிதிலும் பெரிது கேட்டு எல்லா சமன்பாடுகளையும் உடைத்தெறிவதுதானே? டெத் ஓவர்களில் பல திருப்பு முனைகளை போட்டி சந்தித்தது. 17-வது ஓவரில் இளம் வீரரான சலாம் கட்டுப்படுத்தி ஏழு ரன்களை மட்டுமே கொடுக்க, ஸ்லாட்டில் வீசிய பந்துகளால் 18-வது ஓவரை முகேஷ் 23 ரன்களோடு சிறப்பித்தார். அதற்கடுத்த ஓவர்களில் இரு சிக்ஸரைக் கொடுத்திருந்தாலும் நபியை வெளியேற்றி ஆபத்திலிருந்து அணியைக் கொஞ்சமாக மீட்டிருந்தார் சலாம்‌. எல்லோரின் எக்கானமியும் 12-ஐ தாண்டியிருக்க சலாம் 8.5 எக்கானமியோடும் மூன்று விக்கெட்டுகளோடும் “இங்கேயும் ஒரு பும்ரா” என்பது போல் முடித்திருந்தார்.

இத்தனை களேபரங்களுக்கு நடுவிலும் திலக் வர்மா 200-ஐ நெருங்கும் ஸ்ட்ரைக்ரேட்டோடு ஆடிக் கொண்டிருந்தார். தொடர் முழுவதுமே மும்பையின் மிடில் ஆர்டரை அவர்தான் தாங்கிப் பிடிக்கிறார். இறுதி ஓவரின் முதல் பந்திலேயே அவர் ரன்அவுட் ஆகாமல் போயிருந்தால் போட்டியின் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கலாம். முகேஷ் பந்தில் சிக்ஸரும் பவுண்டரியும் அடித்த உட் மற்றும் சாவ்லா அதனைச் சொல்லாமல் சொல்லிவிட்டனர். கடைசி பந்தில் சாவ்லாவை முகேஷ் வெளியேற்ற பத்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி.

முந்தைய போட்டிகளில் டெல்லியின் வேகப்பந்து வீச்சு யூனிட் ரன்களைத் தருவதில் தாராளமயமாக்குவதை விரும்புபவர்கள் என்றாலும் குல்தீப் மற்றும் அக்ஸர்தான் அதனை ஈடுகட்டி வந்தார்கள். ஆனால் இப்போட்டியில் அவர்களது ரன்ரேட்டுமே மற்றவர்களுக்கு இணையாக எகிறிய போதும் அணியை வெல்ல வைத்தது பவர்பிளேயில் விழுந்த மூன்று விக்கெட்டுகளும் ராஷிக் சலாமின் அற்புத ஸ்பெல்லும்தான்.

DC v MI

புள்ளிப்பட்டியலில் இடம் மாற்றமில்லை என்றாலும் ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகளையும் கூடவே தங்களது நம்பிக்கையையும் அதிகப்படுத்திக் கொண்டுள்ளது டெல்லி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.