காரைக்குடி: காரைக்குடி அருகே நடைபெற்ற கொரட்டி மஞ்சுவிரட்டில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்றே்றன. இதில் 11 பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கொரட்டி கிராமத்தில் சிந்தாமணி அம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன.
மாடுபிடி வீரர்கள் பதிவு செய்யாததால், காளைகள் அடக்க அப்பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் களமிறங்கினர். அவர்களை போலீஸார் அனுமதிக்காததால் காளைகள் மட்டும் அவிழ்க்கப்பட்டன. இதனால் அவிழ்க்கப்பட்ட அனைத்து மாடுகளின் உரிமையாளர்களுக்கும் எவர்சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
மேலும் விளைநிலங்கள், கண்மாய் பொட்டல்களில் கட்டுமாடுகளாக 200-க்கும் மேற்பட்ட காளைகள் ஆங்காங்கே அவிழ்த்துவிடப்பட்டன. மாடுகள் முட்டியதில் 11 பேர் காயமடைந்தனர். நான்கு பேர் மேல் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடிகர் கஞ்சாகருப்பு உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனர்.