உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது ரஷியா சரமாரி ஏவுகணை வீச்சு

மாஸ்கோ,

ரஷியாவின் தொடர் எச்சரிக்கைகளை மீறி, நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளை உக்ரைன் முன்னெடுத்ததால் அந்த நாட்டின் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது.

இந்த போரில் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ராணுவ மற்றும் நிதி உதவிகளை வழங்கி பக்கபலமாக இருந்து வருகின்றன. இதன் மூலம் உக்ரைன், ரஷியாவை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.

அதே வேளையில் ரஷியாவும் இலக்கை எட்டும் வரையில் பின்வாங்க போவதில்லை என கூறி போரை தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வருகிறது.

தற்போதைய போரில் ரஷியா வசம் உள்ள உக்ரைன் நகரங்களை மீட்பதற்காக உக்ரைன் ராணுவம் சண்டையிட்டு வருகிறது. அதே சமயம் உக்ரைனின் மற்ற நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷியா தனது தாக்குதல்களை விரிவுப்படுத்தி வருகிறது.

குறிப்பாக உக்ரைனின் மின்உற்பத்தி நிலையங்களை குறிவைத்து ரஷியா தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனின் பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் மீது நேற்று முன்தினம் நள்ளிரவில் ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அந்த நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் மேற்கு பகுதியில் உள்ள இவானோ-பிராங்கிவ்ஸ்க் நகரங்களை குறிவைத்து 30-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷியா வீசியதாகவும், அவற்றில் சுமார் 20 ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழித்ததாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.

அந்த நகரங்களில் உள்ள அனல்மின் நிலையங்களை இலக்காக வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 4 அனல்மின் நிலையங்கள் கடும் சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.