• புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்வையிட ஜனாதிபதியும் இணைந்துகொண்டார்.
“வசத் சிரிய – 2024” சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று (27) காலை 7.00 மணிக்கு கொழும்பு ஷங்ரிலா பசுமை மைதானத்தில் ஆரம்பமாகியதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெருந்திரளான மக்கள் ஆரம்பம் முதலே இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களை இணைத்து இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
அரசதுறை, திறந்த துறை மற்றும் விருந்தினர் துறை ஆகிய 03 பிரிவுகளின் கீழ் பல போட்டிகள் நடத்தப்பட்டதுடன்,இதில் அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
பாரம்பரிய கிராம சமூகத்தில் கிராமத்துக்கும் கிராமத்துக்கும் இடையிலான அழகிய தொடர்பை வெளிப்படுத்தும் வகையில், கிராமத்து வீட்டுடன் கூடிய சூழலின் மாதிரியொன்றும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளதுடன், இனிப்புகள், உடைகள், சிங்களப் புத்தாண்டு சடங்குகள், கிராமிய விளையாட்டுக்கள் உள்ளிட்ட பல கண்காட்சிக் கூடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இராட்டினம், மூங்கில் வெடிக் காட்சிகள், விற்பனை நிலையங்கள் உட்பட மருத்துவ வீடும் மைதானத்தை அலங்கரித்தன.
பெரியவர்களும், பிள்ளைகளும் மிகுந்த ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டதுடன் வெற்றி பெறும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
புத்தாண்டு விழா நடைபெறும் இடத்திற்கு இன்று பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கிருந்த மக்களுடன் சிநேகபூர்வவமாக கலந்துரையாடியதுடன் சில போட்டிகளையும் பார்வையிட்டார்.
அத்துடன், கிராமிய வீடு மற்றும் மருத்துவ வீட்டுக்கும் விஜயம் செய்த ஜனாதிபதி, அவற்றை பார்வையிட்டதுடன், அவற்றை கண்டுகளிக்க வந்திருந்த வெளிநாட்டவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.
தென்னை ஓலை பின்னுதல் அரச பிரிவு, அதிர்ஷ்ட பானை உடைத்தல் அரச பிரிவு (பெண்கள்-பெரியவர்கள்), தேங்காய் துருவும் போட்டி அரச பிரிவில் (பெரியவர்கள்) வெற்றி பெற்றவர்களுக்கு ஜனாதிபதி பரிசுகளை வழங்கினார்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குவதற்காக, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, விளையாட்டு இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ஊடகப் பிரிவு பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க மற்றும் அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் ஏனைய பாதுகாப்புத் திணைக்களத் தலைவர்கள் மற்றும் கௌரவ அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.