மக்களவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் ஒவ்வொருவரும் தங்களது கோரிக்கைகள் அரசின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் போட்டியிடுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அகில பாரத் இந்து மகாசபா சார்பாக ஹேமங்கி சாகி என்ற திருநங்கை போட்டியிட சீட் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு அவரிடம் போட்டியிட வேண்டாம் என்று கட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஹேமங்கி சுயேச்சையாக வாரணாசியில் போட்டியிடுகிறார். இது தொடர்பாக ஹேமங்கி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “திருநங்கைகளின் உரிமைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தலில் போட்டியிடுகிறேன்.
பெண் குழந்தைகளை பாதுகாக்க பிரதமர் பேத்தி பச்சாவ் திட்டத்தை ஆரம்பித்தபோது பார்க்க மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் யாசகம் செய்தும், பாலியல் தொழில் நடத்தியும் வரும் எங்களுக்காக (திருநங்கைகள்) பிரதமரோ அல்லது வேறு யாரும் பிரசாரம் செய்யவில்லை. எங்களது சமுதாயத்தின் உரிமைகளுக்கு குரல் கொடுக்க பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் ஒரு இடமாவது ஒதுக்கப்படவேண்டும். பிரதமர் மோடியை மதிக்கிறேன். அவரது பணி சிறப்பாக இருக்கிறது. ஆனாலும் எங்களது பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக இத்தேர்தலில் போட்டியிடுகிறேன். தேர்தலில் போட்டியிடுவது வெற்றி தோல்விக்காக மட்டுமல்ல.
திருநங்கைகள் மற்றும் சாமானிய மக்களுக்காக குரல் எழுப்பவே தேர்தலில் போட்டியிடுகிறேன். எங்களது சமுதாயம் பல வழிகளில் புறக்கணிக்கப்படுகிறது. பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்டால் எங்களது சத்தம் விரைவில் அரசுக்கு சென்றடையும் என்று நினைக்கிறேன். பிரதமர் மோடி இங்கு திட்டங்களை தொடங்கி வைக்க மட்டுமே வருகிறார். பாதுகாப்பு காரணங்களால் அவரை பொதுமக்களால் சந்திக்க முடிவதில்லை. அப்படி இருக்கும்போது எப்படி அவரிடம் பிரச்னையை சொல்ல முடியும்” என்றார். குஜராத் மாநிலம், பரோடாவில் பிறந்து மும்பையில் வளர்ந்த ஹேமங்கி, கடவுள் கிருஷ்ணர் மீதான பக்தியால் விருந்தாவான் வந்து தங்கி இருக்கிறார்.
இங்கு அவர் ராமாயாணத்தை பாராயணம் செய்ய கற்றுக்கொண்டு மத சடங்குகளையும் செய்து வருகிறார். 2019ம் ஆண்டு நடந்த கும்பமேளாவின் போது ஹேமங்கிக்கு மகாமண்டலேஷ்வர் ஆசாரியா என்ற உயரிய பட்டம் கொடுக்கப்பட்டது. இப்போது விருந்தாவனில் ஹேமங்கி மிகவும் பிரபலம் ஆகும். நிருபர் ஒருவர் உங்களுக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கும் என்று கேட்டதற்கு, 400-க்கும் அதிகமாக கிடைக்கும் என்றும், ஓட்டு வாங்குவதற்காக போட்டியிடவில்லை என்றும், பிரச்னைகளை எழுப்பவே போட்டியிடுகிறேன் என்றும் குறிப்பிட்டார்.