உதகை: நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் டிவி திரையில் திடீரென ஒளிபரப்பாகாததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்துவிட்டதாக ஆட்சியர் மு.அருணா தெரிவித்தார்.
நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதன்படி இரு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள், தலா ஒரு கட்டுபாட்டு கருவிகள், விவிபாட் என மொத்தம் 7,942 இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. நீலகிரி தொகுதியில் 70.93 சதவீத வாக்குகள் பதிவானது. இதைத்தொடர்ந்து உதகை, குன்னூர், கூடலூர், அவிநாசி, பவானிசாகர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.