மகாதேவ் புக் என்ற மொபைல் செயலியின் நிறுவனர்கள் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக மும்பை சைபர் பிரிவு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. அதோடு மகாதேவ் புக் மற்றும் அதோடு தொடர்புடைய மொபைல் செயலிகளை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை தமன்னா உட்பட பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மும்பை போலீஸார் சம்மன் அனுப்பி வருகின்றனர். நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஸ்ரத்தா கபூர் ஆகியோரும் மகாதேவ் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்திருந்தனர். அவர்களுக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது. மகாதேவ் புக் செயலியை சத்தீஷ்கரை சேர்ந்த செளரப் சந்திராகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோர் நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரும் இப்போது துபாயில் பதுங்கி இருக்கின்றனர். இதில் செளரப் தனது திருமணத்தை 200 கோடி ரூபாய் வரை செலவு செய்து துபாயில் ஆடம்பரமாக நடத்தினார்.
இத்திருமணத்திற்கு இந்தியாவில் இருந்து சிறப்பு விமானங்களில் பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் விருந்தினர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அதற்கான பணம் ரொக்கமாக கொடுக்கப்பட்டது. அதோடு இந்தியாவில் மகாதேவ் செயலி மூலம் கிடைக்கும் பணத்தை அதன் உரிமையாளர்களுக்கு சட்டவிரோதமாக டிரான்ஸ்பர் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இப்பணமோசடி தொடர்பாக அமலாக்கப் பிரிவும் மும்பை சைபர் பிரிவு போலீஸும் விசாரித்து வருகிறது.
செளரப்பும் அவரது கூட்டாளிகளும் சத்தீஸ்கர் அரசியல்வாதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து இத்தொழிலை நடத்தியதாக கூறப்பட்டது. மகாதேவ் செயலி பண மோசடியில் நடிகர் சாஹில் கானுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து தெரிந்துகொள்ள விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சாஹில் கானுக்கு மும்பை போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் மும்பை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து கைது நடவடிக்கைக்கு பயந்து மும்பையில் இருந்து தப்பித்து சென்றார்.
அவர் சத்தீஸ்கரில் பதுங்கி இருப்பது குறித்து தெரிய வந்தது. உடனே மும்பை போலீஸார் விரைந்து சென்று சத்தீஸ்கர் போலீஸாரின் துணையோடு ரெய்டு நடத்தினர்.
தொடர்ந்து சாஹில் கான் இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். இறுதியில் 40 மணி நேரம் போராடி அவரை கைதுசெய்தனர். அவர் உடனே மும்பைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். ஸ்டைல், எக்ஸ்கியூஸ்மி உட்பட சில படங்களில் சாஹில் கான் நடித்துள்ளார்.