சென்னை: சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் அடுக்குமாடி குடியிருப்பின் மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்த 7 மாத குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த ஆவடி அருகே திருமுல்லைவாயலில் தனியாருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், வெங்கடேஷ் -ரம்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 7 மாத குழந்தை ஹைரின் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி தகர ஷீட்டில் தவறி விழுந்தது. இதைப்பார்த்த அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள், துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
உடனடியாக அங்கு திரண்ட குடியிருப்பு வாசிகள், குழந்தை கீழே விழுவதைத் தவிர்க்கும் வகையில், பெரிய பெட்ஷீட்டை விரித்து பிடித்தபடி காத்திருந்தனர். இந்நிலையில், சிலர் குழந்தை இருந்த தளத்தின் கீழே இருந்த வீட்டின் பால்கனி வழியாக மேலே ஏறிச் சென்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டனர். உயிரைப் பணயம் வைத்து குழந்தையை மீட்கும் காட்சி இணையத்தில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த மீட்புப் பணியின்போது, குழந்தையின் கை மற்றும் கால் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. குழந்தையை உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருமுல்லைவாயல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.