ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரின் ராம்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சன் நகரில் ஒரு மசூதி இருக்கிறது. இந்த மசூதியில் குழந்தைகளுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தவர் முஹம்மது தாஹிர் (30). இந்த நிலையில், சனிக்கிழமை வழக்கம் போல முஹம்மது தாஹிர் அவருடைய மாணவர்கள் 6 பேருடன் மசூதியில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது, நள்ளிரவு 2 மணியளவில் முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத மூவர், மசூதிக்குள் நுழைந்து அந்த ஆசிரியரை கட்டையால் சாரமாரியாக தாக்கியிருக்கின்றனர். அப்போது, மாணவர்களை சப்தமிடக்கூடாது என்று மிரட்டி அவர்கள் மற்றவர்களை உதவிக்கு அழைக்காதவாறு ஆசிரியரின் செல்போனை பறித்து வைத்துக்கொண்டனர்.
மேலும், சரமாரியாக தாக்கியதில் ஆசிரியர் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பியோடியிருக்கின்றனர். அவர்கள் சென்றபிறகே, மசூதியில் இருந்த மாணவர்கள், வெளியே வந்து அக்கம் பக்கத்தினரை அழைத்து நடந்தவைகளை விளக்கியிருக்கின்றனர். இது தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை) கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை, அடையாளம் தெரியாத மூவரையும் தேடிவருகிறது. தாஹிரின் உடல் அவருடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.