புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் மற்றும் டெல்லி கல்வி அமைச்சர் ஆதிஷி இருவரும் சேர்ந்து திஹார் சிறையில் உள்ள அர்விந்த் கேஜ்ரிவாலை நேற்று சந்தித்துப் பேசினர்.
இதுகுறித்து அமைச்சர் ஆதிஷி நேற்று வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில் கூறியிருப்பதாவது: சிறையிலும் தன்னை பற்றி யோசிக்காமல் 2 கோடி டெல்லி மக்களை பற்றிய கவலையுடனே அர்விந்த் கேஜ்ரிவால் இருந்து வருகிறார். இன்றைய சந்திப்பின்போது டெல்லி அரசு பள்ளிகுழந்தைகளின் கல்வி நிலைகுறித்த தகவல்களை கேட்டறிந்தார்.
பிறகு கோடையில் டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறை நிகழாத வண்ணம் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த வழிகாட்டுதல் வழங்கினார். டெல்லியைச் சேர்ந்த தனது அன்னைகள், தங்கைகள் மற்றும் மகள்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்குவதாகத் அளித்த வாக்குறுதியை விரைவில் வெளிவந்து நிச்சயம் நிறைவேற்றுவதாகத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். இவ்வாறு அமைச்சர் ஆதிஷி கூறியுள்ளார்.