T20 World Cup squad: டி20 உலக கோப்பைக்கான அணி எப்போது வெளியாகும் என்று பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பமான அணியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதில் சிலரது பதிவுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்வதில் தேர்வாளர்களும் கடும் குழப்பத்தில் உள்ளனர். ஒரு சில சீனியர் வீரர்களின் தற்போதைய பார்ம் கவலை அளிப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தலைமையில் தேர்வுக்குழு தீவிர ஆலோசனையில் இருந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை அகர்கர் சந்தித்தார் என்றும் செய்திகள் வெளியானது.
இந்த செய்திகளுக்கு மத்தியில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டொம் மூடி, ஐபிஎல் 2024ல் ஜடேஜாவின் ஸ்டிரைக் ரேட் 131.93 தான். இந்தியாவுக்காக ஃபினிஷர் இடத்தைப் பிடிக்க அவருக்கு இது போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளார். “நான் ஜடேஜாவை கண்டிப்பாக அணியில் எடுத்து அழைத்துச் செல்வேன், ஏனென்றால் அவர் சிறந்த இடது கை ஸ்பின்னிங் ஆல் ரவுண்டர். அவர் நாட்டின் சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர். ஆனால் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் 7வது இடத்தில் பேட்டிங் செய்ய போதுமானவர் இல்லை என்று நான் நினைக்கவில்லை. அதை அவர் தனது ஸ்ட்ரைக் ரேட் மூலம் நிரூபித்துள்ளார். அணிக்கு 7வது இடத்தில் பேட்டிங் செய்ய நல்ல பினிஷர் தேவை,” என்று அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறியுள்ளார்.
டொம் மூடி பேசும் போது உடன் இருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஜடேஜாவின் பேட்டிங் பார்ம் மிகவும் கவலை அளிப்பதாக ஒப்புக்கொண்டார். 2022 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக நம்பர் 6 அல்லது 7ல் இறங்கி ரவீந்திர ஜடேஜா ஏழு இன்னிங்ஸ்களில் 141 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். “உலகக் கோப்பைக்கு என்று வரும் போது நான் மிகவும் பயப்படுவது இதுதான். என் கவலை டி20 உலகக் கோப்பையைப் பற்றியது, டாப்-ஆர்டர் பேட்டிங்கைப் பொருத்தவரை மிகவும் சிறப்பாக உள்ளது. மிடில் ஓவர்களிலும் ஓர் அளவிற்கு நல்ல பேட்டிங் உள்ளது. ரவீந்திர ஜடேஜா 7வது இடத்தில் இறங்குவார் என்றால் உங்களுக்கு ஒரு நல்ல பினிஷர் தேவை. சர்வதேச அளவில் ஸ்ட்ரைக் ரேட்டைப் பொறுத்த வரையில் அவரது எண்ணிக்கை பெரிதாக இல்லை,” என்று டொம் மூடி மேலும் கூறினார்.
மேலும், முன்னாள் பிசிசிஐ தேர்வாளர் கிரிஸ் ஸ்ரீகாந்த் அக்சர் படேலை “மேட்ச்-வின்னர்” என்று கூறிய போதிலும், சர்வதேச கிரிக்கெட்டில் அவரது அனுபவத்தின் காரணமாக ஜடேஜாவை முதல் தேர்வு சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். “விளையாடும் 11 அணியில் ஜடேஜா என்னவாக இருப்பார் என்பதை நான் சொல்கிறேன், ஆனால் அக்சரும் 15 பேர் கொண்ட அணியில் இருப்பார். அவரும் போட்டியின் வெற்றியாளர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அக்சர் அற்புதமாக பேட்டிங் செய்யவும், அற்புதமாக பந்துவீசவும், சிறப்பாக அணிக்கு பங்களிக்கவும் முடியும். ஆனால் ஜடேஜா கடந்த காலத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் மேட்ச் வீரர் என்பதால் முதல் தேர்வாக இருப்பார். அனேகமாக முதல் ஆட்டத்தில் ஜடேஜாவுக்கும், பிறகு அக்சர் படேலுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று நினைக்கிறன்” என்று கூறினார்.