பல மாதங்களாக தமிழ்நாடு அரசு கோரிவந்த வெள்ள நிவாரண நிதியை ஒரு வழியாக மத்திய அரசு விடுவித்திருக்கிறது. அதிலும், மாநில அரசு கேட்டதைவிட மிக மிகக் குறைவானத் தொகையை ஒதுக்கி தமிழ்நாட்டை மத்திய பா.ஜ.க அரசு வஞ்சித்துவிட்டதாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக குற்றம்சாட்டி வருகிறார்கள்.
தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட புயல் மழை:
கடந்த டிசம்பர் மாதம் அடித்த `மிக்ஜாம்’ புயல் மழையால் தமிழ்நாடு மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. குறிப்பாக, மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களும் வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து, அவசர நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு கையிருப்பில் இருக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியை வைத்து, பொதுமக்களுக்கான நிவாரணப் பொருள்கள், நிவாரண நிதியைக் கொடுத்து தற்காலிகமாக நிலைமையை சமாளித்தது.
தமிழ்நாடு கேட்டது… மத்திய அரசு கொடுத்தது..!
அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சார்பில் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தேவையான நிவாரண நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரூ.19,692.69 கோடி ஒதுக்க வேண்டும் எனவும், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ரூ.18,214.52 கோடி ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதாவது, மத்திய அரசின் தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒட்டுமொத்தமாக ரூ.37,907.21 கோடி நிவாரணத் தொகையை தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரியது.
அதையடுத்து, டெல்லி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தும் இந்தக் கோரிக்கையை வைத்தார். தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரிடமும் தமிழக எம்.பிக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வர, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தது. நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.
இந்த நிலையில், தேசிய நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு ரூ.276.10 கோடியை விடுவிப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. குறிப்பாக, மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புக்காக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு ரூ.115.49 கோடியும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ரூ.160.61 கோடியும் நிவாரண நிதியாக மத்திய அரசு விடுவித்திருக்கிறது. இது தமிழக மக்களிடையே கடுமையான ஏமாற்றத்தையும், அரசியல் தலைவர்களிடையே மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கொந்தளிக்கும் தமிழ்நாடு தலைவர்கள்:
மத்திய அரசு விடுவித்திருக்கும் சொற்ப நிவாரணத் தொகைக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், “மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய். ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்ச நீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!” எனத் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டை பல்வேறு புயல்கள் தாக்கி இருக்கின்றன. ஆனால் மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு இதுவரை கொடுத்ததில்லை. தி.மு.க ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை!” என குற்றம் சாட்டியிருக்கிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கிட்டத்தட்ட 2015-ம் ஆண்டிலிருந்து நாம் கணக்கெடுத்து பார்த்தால், சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் நாம் நிவாரணமாக மத்திய அரசைக் கேட்டிருக்கிறோம். ஆனால், யானைப் பசிக்கு சோளப்பொரி என்பதைப்போல, இதுவரை வெறும் 7 ஆயிரம் கோடி ரூபாயைத்தான் மத்திய அரசு கொடுத்திருக்கிறது. வடமாநிலத்தில் ஏதேனும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் உடனே வாரி வழங்குகிறார்கள். ஏன் தமிழ்நாடு வரி கொடுப்பதில்லையா? வடக்குக்கு ஒரு நீதி தெற்குக்கு ஒரு நீதி என்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று!” என விமர்சித்திருக்கிறார்.
தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, “இதன்மூலம் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் நாம் கேட்ட தொகையை ஒதுக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு மறுத்தது தெளிவாக தெரிகிறது. இந்த ஒதுக்கீடு யானைப் பசிக்கு சோளப் பொரி போட்டது போல் இருக்கிறது. எனவே, தமிழகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரண நிதி வழங்காத பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக பேசுவது அப்பட்டமாக நீலிக் கண்ணீர் வடிப்பதாகத் தான் கருத முடியும். தமிழக மக்கள் மீதோ, தமிழக வாழ்வாதாரத்தின் மீதோ கொஞ்சம் கூட கருணை காட்டாத அணுகுமுறையை தான் பிரதமர் மோடி கையாண்டு வருகிறார் என்பதற்கு உள்துறை அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீடு மேலும் உறுதி செய்கிறது. இத்தகைய வஞ்சிக்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, “தமிழக அரசு கேட்ட நிதியில், மத்திய அரசு ஒரு சதவீதத்துக்கு கீழே அதாவது 0.78 சதவீதம் மட்டுமே இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்காக தமிழகத்துக்கு வழங்கி உள்ளது. ஆனால். கர்நாடகாவிற்கு வறட்சி பாதிப்புக்காக 3498.82 கோடி ரூபாயை மத்திய அரசு அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலை குறி வைத்துதான் கர்நாடக மாநிலத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் தமிழக அரசு மத்திய பாஜக அரசிடம் கேட்ட தொகை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 655 கோடி ரூபாய். ஆனால் மத்திய அரசு அளித்த தொகை வெறும் 5884.49 கோடி ரூபாய் மட்டுமே. தமிழக அரசு கேட்ட தொகையில் வெறும் 4.6 சதவீதம் மட்டுமே மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல்!” என குறிப்பிட்டிருக்கிறார். இதேபோல, கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க, நா.த.க என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றனர்.
பா.ஜ.க விளக்கம்:
இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “வெள்ள நிவாரண நிதியை பொறுத்தமட்டில், வறட்சி நிவாரணமாக இருக்கட்டும் வெள்ள நிவாரணமாக இருக்கட்டும்… அதற்கு எப்படி கொடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு கணக்கீடு இருக்கிறது. அதன்படி, நாம் வெள்ள நிவாரணரத்திலிருந்து எவ்வளவு கொடுக்க வேண்டும், பேரிடர் நிவாரணத்திலிருந்து எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற கணக்கீட்டின்படி கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, நிதியும் கிடைத்துள்ளது, நீதியும் கிடைத்துள்ளது!” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs