பில்லில் சேவை வரி சேர்த்த ஹோட்டலுக்கு ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது மும்பை நுகர்வோர் குறை தீர்ப்பு நீதிமன்றம்.
கடந்த 2017-ம் ஆண்டு, தனியார் ஹோட்டல் ஒன்று தனது பில்லில் சேவை வரியையும் சேர்த்துள்ளதாக யோகேஷ் பத்கி என்பவர் மும்பை நுகர்வோர் குறை தீர்ப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “சேவை வரி என்பது கட்டாயம் கிடையாது. அது முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களின் விருப்பம் சார்ந்தது. அதனால் பில்லில் 5 சதவிகித சேவை வரியை கட்டாயமாக குறிப்பிடக்கூடாது.
இதே போன்றது தான் டிப்ஸும். இது வாடிக்கையாளர்கள் மற்றும் சர்வர்கள் சார்ந்தது. டிப்ஸ் கட்டாயம் தர வேண்டும் என்பதில்லை” என்று உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் மட்டுமல்ல இந்தியா முழுக்கவே பல ஹோட்டல்களில் பில்லோடு சேவை வரியும் வசூலிக்கப்படுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஹோட்டல் பில்களில் சேவை வரியை கட்டாயமாக சேர்க்கக்கூடாது. அது வாடிக்கையாளர்களின் விருப்பம் சார்ந்தது என்ற விதிமுறையை வெளியிட்டது. இதன்படி எந்த ஹோட்டல் பில்லிலும் சேவை வரியை கட்டாயமாக சேர்க்கக் கூடாது.
ஒருவேளை சேர்க்கப்பட்டிருந்தாலும், உங்களுக்கு அந்த ஹோட்டலின் சேவை திருப்திகரமாக இல்லாத பட்சத்தில் அந்த வரியை பில்லில் இருந்து நீக்குமாறு ஹோட்டல் நிர்வாகத்திடம் கூறலாம். அவர்கள் நீக்க மறுத்தவிட்டால், தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைனிலோ, 1915-க்கு போன் செய்தோ புகாரளிக்கலாம். மாவட்ட ஆட்சியரிடம் கூட புகாரளிக்கலாம் என்று இந்த விதிமுறை கூறுகிறது.
அடுத்த முறை ஹோட்டல் போகும்போது மறக்காம பில்லை செக் பண்ணிடுங்க மக்களே…