20 ஓவர் உலக கோப்பை
ஐபிஎல் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடர் முடிந்ததும் 20 ஓவர் உலக கோப்பை நடைபெற இருக்கிறது. இதில் விளையாடும் இந்திய அணி வீரர்களுக்கான தேர்வு அஜித் அகர்கர், ஜெய்ஷா, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் தலைமையில் கடந்த சில வாரங்களாகவே நடந்தது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் இளம் வீரர்கள் கவனிக்கப்பட்டனர். அதனடிப்படையில் இந்திய அணியின் தேர்வு இருந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக 20 ஓவர் உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சு சாம்சன், ரிஷப் ஆகியோருக்கு வாய்ப்பு
April 30, 2024
அதில் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்புக்கு காத்துக் கொண்டிருந்த சஞ்சு சாம்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் அதிரடியாக ஆடிய விதம் தேர்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்த நிலையில், 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் பெயர் இடம்பெற்றுள்ளது. அதேபோல், கார் விபத்து காரணமாக சிகிச்சையில் இருந்த ரிஷப் பந்த் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். ஐபிஎல் போட்டியில் அவர் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும் நிலையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா
ஐபிஎல் போட்டியில் மோசமான பார்மில் இருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் இந்திய அணியில் இடம்பெறாமல் கூட போகலாம் என கூறப்பட்ட நிலையில், அணியில் இடம்பெற்றுள்ளார். அதேபோல், ஜெய்ஷ்வால், விராட் கோலி, ஜடேஜா ஆகியோரும் இந்த அணியில் உள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியுடன் இணைந்திருக்கிறார் யுஸ்வேந்திர சாஹல்.
சுழற்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அவரும் குல்தீப் யாதவ் உள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்களாக அர்ஷ்தீப், சிராஜ், பும்ரா, ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா, அக்சர், துபே உள்ளனர். அதேநேரம், ரிசர்வ் வீரர்களாக ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அதேபோல் தமிழ்நாட்டு பிளேயர்கள் யாரும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இல்லை.
20 ஓவர் உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி : ரோஹித் சர்மா, விராட் கோலி, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், மொகமது சிராஜ்.
ரிசர்வ் வீரர்கள் : ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது ஆவேஷ் கான்.