பணம் செலுத்தினால் மாத்திரமே நாளைய மே மாதம் பேரணிகளுக்கு பஸ்கள் விடுவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், மே பேரணிக்கு பல்வேறு தரப்பினருக்கு பஸ்களை வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொது போக்குவரத்தை தடை செய்யாத வகையில் எந்தவொரு அரசியல் கட்சி, தொழிற்சங்கம் அல்லது வேறு எந்த தரப்பினரும் பணம் செலுத்திய பின்னர் பஸ்களை வழங்குமாறு இ.போ.ச தலைவர் உள்ளிட்ட முகாமைத்துவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்;. எந்தவொரு நிறுவனத்திற்கும், பணம் செலுத்தாமல் பஸ்கள் விடுவிக்கப்பட மாட்டாது எனவும், பஸ்களை விடுவிப்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பதாகவும்; அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்தார்.