அகமதாபாத்: எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசிகளின் இடஒதுக்கீட்டை குறைக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக கூறப்படும் போலி வீடியோவை பகிர்ந்தது தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரின் உதவியாளர், ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர் ஆகிய இருவரை கைது செய்திருப்பதாக குஜராத் போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து குஜராத் காவல் துறை வெளியிட்ட தகவல்: இந்த விவகாரம் தொடர்பாக அகமதாபாத் சைபர் கிரைம் போலீஸார், பனஸ்கந்தாவின் பலன்பூரில் வசிக்கும் சதீஸ் வன்சோலா மற்றும் தகோத் மாவட்டம் லிம்கேதா நகரைச் சேர்ந்த ராகேஷ் பரியா ஆகியோரை கைது செய்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் வன்சோலா என்பவர் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவாணியிடம் கடந்த ஆறு ஆண்டுகளாக தனி உதவியாளராக பணியாற்றியுள்ளார். மேலும், பன்ஸ்கந்தா மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். பரியா கடந்த 4 ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சியின் தகோத் மாவட்டத் தலைவராக இருந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153ஏ (இரண்டு குழுக்களுக்குள் பகைமையே உருவாக்குவது) மற்றும் 505(2) ( பிரிவுகளுக்கு இடையே பகை மற்றும் வெறுப்பை வளர்க்கும் அறிக்கை உருவாக்குவது) ஆகிய இரண்டு பிரிவுகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு இடஒதுக்கீடு பெறும் மற்றும் இடஒதுக்கீடு பெறாத பிரிவுகளுக்கு இடையில் பகையை உருவாக்கும் வகையில் அமித் ஷாவின் மாற்றப்பட்ட போலி வீடியோவை இவர்கள் பகிர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சைபர் க்ரைம் போலீஸ் இணை ஆணையர் லாவினா சின்ஹா கூறுகையில், “அவர்கள் இருவரும் அமித் ஷாவின் திருத்தப்பட்ட வீடியோவை தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அந்த வீடியோ கிடைத்திருக்கிறது. அந்த வீடியோவை எடிட் செய்த நபர் யார் என்பது குறித்து இன்னும் விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.
இதனிடையே, வன்சோலாவின் கைது குறித்து பனஸ்கந்தாவின் வட்கம் (தனி) தொகுதி எம்எல்ஏவும், குஜராத் காங்கிரஸின் செயல் தலைவருமான மேவாணி கூறுகையில், “சதீஷ் என்னுடைய தனி உதவியாளர் மட்டும் இல்லை. அவர் என் சகோதரரைப் போன்றவர். நீண்ட நாட்களாக பாஜகவின் ஐடி பிரிவு போலி வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அவர்களை எல்லாம் கைது செய்யாமல், தவறுதலாக வீடியோ பகிர்ந்த வன்சோலா போன்ற சாமானியர்களை போலீஸார் கைது செய்கின்றனர். வன்சோலா கைது செய்யப்பட்டிருப்பதை பன்ஸ்கந்தா மற்றும் பட்னா மக்களவைத் தொகுதி மக்கள் வாக்களிக்கும்போது மனதில் வைத்துக்கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, தேர்தல் நேரத்தில் அமித் ஷாவின் போலியான மற்றும் மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்ததாகக் கூறி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திங்கள்கிழமை தேர்தல் ஆணையத்திடம் புகார் பாஜக தெரிவித்தது. காங்கிரஸ் மீது தீவிர நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தது.
அதேபோல், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு மையம் (14சி) அமித் ஷாவின் போலி வீடியோ குறித்து அளித்த புகாரினைத் தொடர்ந்து டெல்லி காவல் துறையின் சிறப்பு பிரிவு ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தது. அமித் ஷாவின் போலி வீடியோவில், அவர் தெலங்கானாவில் மத அடிப்பிடையில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்ற அவர் அளித்த உறுதியை, எல்லாருக்குமான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று மாற்றப்பட்டிருந்தது.