- பொய்யான கூற்றுகளுக்கு ஏமாறாதீர்கள் – மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், அதனுடன் தொடர்புபட்டதாக மண்சரிவுகளோ அல்லது வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளோ இதுவரை பதிவாகவில்லை. மழையுடன் ஏற்படும் சிறிய நீரூற்றுக்களை காண்பித்து மக்களை தவறாக வழிநடத்த சிலர் முயற்சிப்பதாக மின்சக்தி மற்றும் வல சக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஹேரத் தெரிவித்தார்.
உமா ஓயா பிரதேசத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் விரிசல்கள் மற்றும் நீர்க் கசிவுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக பூகற்பவியலாளர்கள் குழுவொன்று நாளை (01) அப்பகுதிக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த,
உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை நிறைவு செய்வதில் 09 வருடங்கள் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக நாட்டுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 09 ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்பு 587 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஆரம்ப மதிப்பீடு 529 மில்லியன் டொலர்களாக பதிவு செய்யப்பட்டது.
ஆனால் கடந்த 09 வருடங்களில் உமா ஓயா திட்டத்தின் ஊடாக மின்சார உற்பத்தி மேற்கொண்டு அதனை தேசிய கட்டமைப்பில் சேர்க்க முடியாமல் போனதால் இத்திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட தொகைக்கு நிகரான இழப்பை சந்திக்க வேண்டியிருந்தது. அத்துடன் உமா ஓயா திட்டத்தின் மூலம் மின்சார உற்பத்தியை தேசிய கட்டமைப்பில் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தினால் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறி மக்களை தவறாக வழிநடத்தும் ஊடக நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக தெரிகிறது.
மழைக்கு பின் தோன்றும் சிறிய அருவிகளை காட்டி இந்த வளர்ச்சி திட்டத்தை சீர்குலைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்த திட்டத்துடன் தொடர்புடைய மண்சரிவு அல்லது வேறு எந்த சம்பவமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், உமா ஓயா பிரதேசத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் விரிசல்கள் மற்றும் நீர்க்கசிவுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நாளை (01) பூகற்பவியலாளர்கள் குழுவொன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அங்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அதற்கெல்லாம் தொழில்நுட்ப ரீதியிலான தீர்வுகள் உள்ளன என்பதை அரசாங்கம் என்ற வகையில் நாங்களும் பொறுப்புடன் கூறுகிறோம்.
அப்படி இருந்தால், அதை எப்படி தடுப்பது என்பது பற்றிய அனுபவம் உலகம் முழுவதும் உள்ளது. கடந்த காலங்களில் சிலரின் நாசவேலைகளால் நாடு இவ்வாறான பல அபிவிருத்தித் திட்டங்களை இழந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் அமைக்க முன்மொழியப்பட்டது, ஆனால் நீதிமன்ற நடவடிக்கைகளால் அது இழக்கப்பட்டது.
மேலும், கெல்வரபிடிய LNG ஆலை மற்றும் பல்வேறு சிறிய மின் உற்பத்தி நிலையங்கள் போராட்டங்கள் மூலம் இழக்கப்பட்டன. இவ்வாறாக பொதுமக்களை அச்சுறுத்தும் மற்றும் தூண்டிவிடக்கூடிய செய்திகள் மூலம் பல அபிவிருத்தித் திட்டங்கள் நாட்டிற்கு இல்லாமல் போய்விட்டன. எனவே, உண்மை தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
மேலும், மின்சார உற்பத்தியில் 70% புதுப்பிக்கத்தக்க வலுசக்தியில் இருந்து பெறுவது என்ற கொள்கை முடிவை எங்கள் அரசாங்கம் எட்டியுள்ளது. நீர், சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் நிலையங்கள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், 10 மெகாவோர்ட்டிற்கு குறைவான காற்றாலை அல்லது சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களை விரைவாகப் பெற மின்சார சபை மற்றும் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை இணைந்து புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பெற முடியாவிட்டால், எதிர்காலத்தில் இன்னொரு மின் நெருக்கடி உருவாகலாம்.
மேலும், மின் உற்பத்தி நிலையங்களுக்கு அனுமதிப் பத்திரங்களைப் பெற்று ஆலைகளை தொடங்காமல் காலதாமதம் செய்து, அந்த அனுமதிப் பத்திரங்களை அதிக தொகைக்கு ஏனைய தரப்பினர்களுக்கு விற்பனை செய்யும் மாபியாவையும் கண்காணித்து வருகின்றோம். எனவே, மின் உற்பத்தி நிலையங்களை விரைவுபடுத்துவதற்கான புதிய திட்டத்தை தற்போது தொடங்கியுள்ளோம். அதன்போது புள்ளி முறைமை மூலம் அனுமதி வழங்கி, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சரியான நேரத்தில் விரைவாக சேகரிக்கும் செயற்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், 05 முதல் 500 மெகாவோர்ட் வரையிலான மேற்கூரை சோளார் பெனல் திட்டங்களால் கடந்த காலத்தில் மாதத்திற்கு சுமார் 22 மெகாவோர்ட்களை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் இந்த நிலை குறித்து முறையான ஆய்வுகளைச் செய்த பிறகு மார்ச் மாதத்துக்குள் அந்த அளவை 40 மெகாவோர்ட்டாக உயர்த்த முடியும்” என்று மின்சக்தி மற்றும் வல சக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.