புதுடெல்லி: அரவிந்த் கேஜ்ரிவாலின் உடல்நிலை சீராக இருப்பதாக, அவரை திகார் சிறையில் சந்தித்ததற்குப் பிறகு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கேஜ்ரிவாலின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. அவர் இன்சுலின் எடுத்து வருகிறார். தொடர்ந்து தினசரி பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பண்ணை விளைபொருட்கள் குறித்தும் என்னிடம் கேட்டறிந்தார். பஞ்சாப் மாநிலத்தின் அரசு பள்ளியில் படித்த 158 மாணவர்கள் ஜேஇஇ முதன்மை தேர்தலில் தேர்ச்சி பெற்றதை கூறினேன். அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார். இது எங்களுடைய கனவுகளின் கல்விப் புரட்சி. ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
நான் சமீபத்தில் குஜராத் சென்றிருந்தேன். அது குறித்தும் கேட்டறிந்தார். அவரைப் பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் ஜனநாயகத்தைக் காப்பாற்ற மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற தகவலை என்னிடம் தெரிவித்தார். இந்தத் தேர்தல் வெற்றி, தோல்விக்கானது அல்ல, அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்கான தேர்தல். நாங்கள் எங்கள் குடும்பங்களைப் பற்றி பேசிக் கொண்டோம். கேஜ்ரிவால் எனது மகளின் நலம் குறித்தும் விசாரித்தார்” என்றார்.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், கேஜ்ரிவால் ஏப்ரல் 1 முதல் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திங்களன்று, கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா மற்றும் டெல்லி அமைச்சர் அதிஷி ஆகியோர் அவரை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.