புதுச்சேரி: புதுச்சேரி – நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளர் (பார்மசிஸ்ட்) இல்லாததால் மாத்திரை வாங்க வந்த முதியோர் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பொது மருத்துவம், கண் மருத்துவம், சித்த மருத்துவம், ரத்த பரிசோதனை, பிரசவம் உள்ளிட்ட பிரவுகள் இயங்கி வருகின்றது. இந்த ஆரம்ப சுகாாதர நிலையம் மூலம் நெட்டப்பாக்கம், கல்மண்டபம், பண்டசோழநல்லுார், வடுக்குப்பம், கரியமாணிக்கம் உள்ளிட்ட 15 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் சர்க்கரை, ரத்த அழுத்தம், காசநோய் உள்ளிட்ட தொடர் நோயாளிகளுக்கும் இங்கு செவ்வாய் கிழமைதோறும் மாத்திரை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருந்தாளர் கடந்த 10 நாட்கள் விடுப்பில் சென்றுள்ளார். இதனால் சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவர் ஆலோசனை வழங்கிய பின், மருந்து, மாத்திரைகள் வழங்க மருந்தாளர் இல்லை. இதனால் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், மருத்துவ அதிகாரிகள் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கும் நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக நோயாளிகள் பலமணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.
இதுபோல் தொடர் நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் உட்கொண்டு வரும் முதியோர் காலை முதல் மாலை வரை காத்திருந்து மருந்து வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொடர் நோயினால் பாதிக்கப்பட்ட முதியோர் காலை 8 மணி முதலே மாத்திரை வாங்க வந்திருந்தனர். ஆனால் அங்கு மருந்தாளர் இல்லாததால் சுமார் 6 மணி நேரம் வரை காத்திருந்தனர். அவர்களுக்கு மாத்திரை வழங்க மாற்று ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஒரு சில முதியவர்கள் மயங்கி விழுந்தனர். சிலர் சுகாதார நிலைய வளாகத்தில் படுத்து தூங்கினர். பிற்பகல் 2 மணிக்கு மேல் காத்திருந்த முதியவர்களுக்கு மத்திரைகள் வழங்கப்பட்டது. பின்னர் அதனை வாங்கிக்கொண்டு அவர்கள் அங்கிருந்து வீடுகளுக்கு சென்றனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரை வாங்க வந்த முதியோர் காத்திருந்த வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், பேசும் முதியவர்கள் காலை முதல் காத்திருப்பதாகவும், மாதந்தோறும் இதே நிலை தான் உள்ளது. சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்டால் உரிய பதில் அளிப்பதில்லை. மாத்திரை வாங்க வருவது என்பதே மிகுந்த சிரமமாக உள்ளது என கூறுவது அதில் பதிவாகியுள்ளது.
அதே நேரத்தில் நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் காத்திருந்து மாத்திரை வாங்குவதை தவிர்க்க அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதுபற்றி புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “மருந்தாளர் நேற்று முதல் திடீர் விடுப்பில் சென்றுவிட்டார். அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 செவிலியர்கள் உள்ளனர். அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையின் காரணமாக மருந்து வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் அந்த பிரச்சினை சரி செய்யப்படும்” என்று தெரிவித்தனர்.