மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் தலைமையில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என்ற திட்டம் வைத்திருக்கிறார்கள்” என்று விமர்சித்தார்.
மேலும், “எதிர்க்கட்சிகளால் மூன்று இலக்கத்தைக்கூட எட்ட முடியாது. அவர்கள் ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்ற திட்டத்தை வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஐந்தாண்டு காலம் ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்தால், ஐந்து பிரதமர்கள் இருப்பார்கள். ஆனால், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என்று கனவு காண்பவர்களை நாடு சகித்துக்கொள்ளாது” என்றார் மோடி. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதே கருத்தை தனது தேர்தல் பிரசாரத்தில் முன்வைத்து வருகிறார்.
“கர்நாடகாவில் மாநில முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, துணை முதல்வரிடம் கொடுப்பது என்ற சுழற்சி முறையை செயல்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது. சத்தீஸ்கரிலும் ராஜஸ்தானிலும் அது போன்ற திட்டம் காங்கிரஸுக்கு இருந்தது” என்றும் பிரதமர் மோடி கூறினார்.
பிரதமரின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து, அரசியல் களத்தில் பலமான விவாதங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.
ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என்ற கதையெல்லாம் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதற்கு முன் கிடையாது. 2004 முதல் 2014 வரை மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தது. அந்த அமைச்சரவையில் தி.மு.க உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றன. ஆனால், அந்த பத்தாண்டு காலமும் மன்மோகன் சிங் மட்டுமே பிரதமராக இருந்தார்.
பி.வி.நரசிம்ம ராவ் தலைமையில் 1991-1996 காலக்கட்டத்தில் காங்கிரஸ் அரசு மத்தியில் இருந்தது. அந்த ஆட்சி நிறைவுபெற்ற பிறகு, 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க வெற்றிபெற்றது. ஆனால், மக்களவையில் மெஜாரிட்டியை நிரூபிக்கத் தவறியதால், ஆட்சி கவிழ்ந்தது. 1996-ம் ஆண்டு மே 16-ம் தேதி பிரதமராகப் பதவியேற்ற பா.ஜ.க-வின் அடல் பிஹாரி வாஜ்பாய் 16 நாள்களிலேயே பதவியை இழந்தார்.
அதன் பின்னர், காங்கிரஸ் அல்லாத, பா.ஜ.க அல்லாத கட்சிகள் இணைந்து, காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு மத்தியில் ஆட்சியமைத்தன. 1996-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி பிரதமராகப் பதவியேற்ற ஹெச்.டி.தேவகவுடா, 324 நாள்கள் பிரதமராக இருந்தார். பிறகு 1997-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி பிரதமராகப் பதவியேற்ற ஐ.கே.குஜ்ரால் 332 நாள்கள் பிரதமராக இருந்தார்.
1999-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் அமைந்தது. 2004 வரை அந்த ஆட்சி தொடர்ந்தது. ஆக, ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்ற ரீதியில் இதற்கு முன்பு எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெற்றதில்லை.
‘இந்தியா’ கூட்டணியில் 28 கட்சிகள் இடம்பெற்றிருப்பதால், ‘இந்தியா’ கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வரும் பட்சத்தில், அவர்களால் ஒற்றுமையுடன் ஆட்சி நடத்த முடியாது என்ற பிம்பத்தை ஏற்படுத்த பிரதமர் மோடி விரும்புகிறார். ஆகவேதான், 5 ஆண்டுகளில் 5 பிரதமர் என்ற பிரசாரத்தை பிரதமர் மோடி முன்வைக்கிறார் என்று புரிந்துகொள்ள முடிகிறது.
பிரதமர் மோடிக்கு இந்த பிரசாரத்துக்கு ‘இந்தியா’ கூட்டணி பதிலடி கொடுத்திருக்கிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவத், “பிரதமரைத் தேர்வுசெய்வது என்பது ‘இந்தியா’ கூட்டணியின் தனி உரிமை. ஓர் ஆண்டுக்கு இரண்டு பிரதமர்களையோ, நான்கு பிரதமர்களையோகூட அவர்கள் தேர்வு செய்வார்கள். ஆனால், இந்த நாடு ஒரு சர்வாதிகாரத்தை நோக்கி போவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். ஜனநாயகப்பூர்வமாகத் தேர்வுசெய்யப்பட்ட ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியைக் காட்டிலும், கூட்டணி ஆட்சி சிறப்பான ஒன்று” என்றார்.
மோடி சொல்வதுபோல ஒருவேளை இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் பட்சத்தில், கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் நடப்பது போன்று நடக்குமா… அல்லது ஒற்றைத் தலைமையின் கீழ் ஆட்சி நடைபெறுமா என்பதையெல்லாம் தீர்மானிப்ப,து தேர்தல் முடிவுகள்தான். எனவே அதற்கு நாம் காத்திருந்த ஆக வேண்டும்!