இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன்
சமீபத்தில் பாடலாசிரியர் வைரமுத்து, இசை பெரிதா? பாடல் பெரிதா என்று ஒப்பிடும் வகையில் பேசியதோடு, இளையராஜாவையும் மறைமுகமாக தாக்கி பேசி இருந்தார். இந்த நிலையில் இளையராஜா குறித்து இனிமேல் பேசினால் நடப்பதே வேறு என்று இளையராஜாவின் தம்பியும், இயக்குனரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் வைரமுத்துவிற்கு எதிராக ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில், ‛‛இளையராஜா இல்லை என்றால் இன்றைக்கு வைரமுத்துவே இல்லை. அவர் எழுதிய முதல் பாடலான இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலை இளையராஜா தன்னுடைய இசையில் பயன்படுத்தாவிட்டால் வைரமுத்து என்பவர் யார் என்றே தெரிந்திருக்காது. எந்த மனிதனாக இருந்தாலும் தான் வளர்ந்த விதம் குறித்து நினைத்து பார்த்து நன்றியுடன் இருக்க வேண்டும்.
இன்றைக்கு பாரதிராஜா இல்லை என்றால் நாங்கள் இல்லை என்பது போல் இளையராஜா இல்லையென்றால் வைரமுத்து இல்லை என்று கூறியிருக்கும் கங்கை அமரன், வைரமுத்து ஒரு நல்ல கவிஞராக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு நல்ல மனிதர் இல்லை. இளையராஜா எப்படி தனது வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறாரோ அதுபோன்று வைரமுத்துவும் அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும்.
உங்களை வாழ வைத்ததே பாரதிராஜாவும் இளையராஜாவும் தான். அதனால் இளையராஜா படத்தை நீங்கள் தினமும் கும்பிட வேண்டும் என்றும் கூறியுள்ள கங்கை அமரன், இதற்கு மேலும் இளையராஜா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் அவர் பேச மாட்டார் அவருடைய தம்பியாகிய நான் பேசுவேன் என்றும் அந்த வீடியோவில் வைரமுத்துவை எச்சரித்துள்ளார் கங்கை அமரன்.