இந்திய அணியைத் தேர்வு செய்வதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மீது பாரபட்சம் காட்டுவது ஏன்? என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
2024-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. ஜூன் 29 ஆம் தேதி வரை இத்தொடர் நடைபெற இருக்கிறது. இதனிடையே டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கவுள்ள 20 அணிகளும் மே 1ஆம் தேதிக்குள் 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்து, ஐசிசியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது.
அந்த வகையில் ரோஹித் சர்மா (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா,அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷதீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்கின்றனர். இதில் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தமிழக வீரரான நடராஜன், தினேஷ் கார்த்திக், சாய் சுதர்சன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை.
இந்நிலையில் இந்திய அணியின் தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரான பத்ரிநாத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். “தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இருமடங்கு சிறப்பாக விளையாடி தங்களை நிரூபித்தால் மட்டுமே அணியில் இடம் கொடுப்போம் என்ற பாரபட்சம் ஏன்? டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இடம்பெற்றிருக்க வேண்டும். பிற மாநில வீரர்களைப் போல தமிழ்நாட்டு வீரர்களுக்கு ஏன் கூடுதல் ஆதரவு கிடைப்பதில்லை? தனிப்பட்ட முறையில் நானும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.
இதனை யாரும் வெளிப்படுத்துவதில்லை என்பதால் நான் பேசுகிறேன். 500 விக்கெட் வீழ்த்திய அஸ்வினை கேள்வி கேட்கிறார்கள். டெஸ்ட் வரலாற்றில் சிறந்த டாப் 5 தொடக்க வீரர்களில் முரளி விஜய் உள்ளார். அவர் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் கேள்வி கேட்கிறார்கள். இதுகுறித்து கேள்விகள் ஏன் எழவில்லை என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது.” என்று பேசியிருக்கிறார்.
நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமாரும் நடராஜனுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், “ டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில், சிறந்த வேகப்பந்து வீச்சாளரும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடராஜன் அவர்களின் பெயர் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. வாய்ப்பு இருப்பின் அவரை தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் மறுபரிசீலனை செய்யலாம்” என்று குறிபிட்டிருக்கிறார்.
தமிழக வீரர் நடராஜ் அணியில் எடுக்கப்படாதது குறித்து உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!