வின்னர் – 2003ம் ஆண்டு வெளியான திரைப்படம். 20 ஆண்டுகள் கடந்தும் கைப்புள்ள – கட்டதுரை காமெடி, பிரசாந்த் – வடிவேலு காம்போ எப்போது பார்த்தாலும் மாறாத நகைச்சுவை உணர்வுடன் சிரிக்க வைக்கின்றன.
ஃபிரேம் பை ஃபிரேம் அத்தனை காட்சிகளும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை. கைப்புள்ளையின் வீடு, ஆழியார் அணையின் வின்னர் ஃபால்ஸ், பொள்ளாச்சி தென்னந்தோப்புத் தொடங்கி க்ளைமாக்ஸில் ரயிலில் பரபரபாகத் தப்பி ஓடும் பிரசாந்த் – கிரண் காதல் வரை படத்தின் காட்சிகள் இப்போதும் பசுமையாகக் கண்முன் வந்துபோகின்றன. ஜாலியான கூட்டணியுடன், ஜாலியாக எடுக்கப்பட்ட இப்படம் பற்றி ஜாலியாக விகடன் நிரூபர்களிடம் பேசினார் இயக்குநர் சுந்தர்.சி.
‘என்ன தம்பி இந்தப் பக்கம்’ என சுந்தர் சி வியக்க, சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த நடிகர் பிரசாந்தும் இணைந்து கொண்டு இருவரும் ‘வின்னர்’ படம் உருவான கதைப் பற்றி பகிர்ந்து கொண்டனர்.
தெலுங்குத் திரையுலகின் மேல் இருந்த வெறுப்பில்தான் ‘வின்னர்’ படம் எடுத்தேன்.
சுந்தர் சி: “தெலுங்குல பெரிய தயாரிப்பாளரா இருந்த ராம் நாயுடு சார் நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்னு ஹைதராபாத்துக்குக் கூப்பிட்டார். ‘நம்ம படமே நிறைய இருக்குப் பாருங்க, பிடிச்சிருந்தா அதவே ரீ-மேக் செய்யலாம்’னு சொன்னார். நானும் அவங்க ஸ்டூடியோல இருக்க தியேட்டர்ல வரிசையா மூணு படம் பார்த்தேன். அதுல ஒண்ணு, என்னோட படங்களை அப்படியே காப்பி அடிச்சு வச்ச மாதிரி இருந்துச்சு. அதுவும் அந்தப் படம் தெலுங்குல சூப்பர் டூப்பர் ஹிட்னு சொன்னாங்க. அந்த இயக்குநர் அப்படியே என்னோடு படங்கள்ல இருந்து அப்படியே எல்லாத்தையும் காப்பி அடிச்சு வச்சிருந்தாரு.
என்னோடு மூணு படத்துல இருந்தும் கலந்து காப்பி அடிச்சதால எந்தப் படத்துக்கு காப்பி ரைட்ஸ் கேக்குறதுன்னு குழம்பிட்டேன். அதுலயிருந்து தெலுங்குத் திரைத்துறை மேல ஒருவித கோபம் வந்துடுச்சு. ‘நீங்க என்ன என் படத்த காப்பி அடிக்கிறீங்க. நான் உங்ககிட்ட இருந்து காப்பி அடிக்கிறேன் பாரு’ன்னு சாவல்விட்டு எழுத ஆரம்பிச்சதுதான் ‘வின்னர்’ படம். அப்படித்தான் இந்தப் படம் ஆரம்பிச்சது. தெலுங்குப் படங்களை அப்படியே ஈ அடிச்சான் காப்பி அடிக்கக் கூடாதுன்னு கொஞ்சம் கொஞ்சம் மாத்தி வேற கதையா எடுத்தேன்.
தெலுங்குல ஒரு படத்துல ஹீரோவைப் பழிவாங்க, ஹீரோயின் வாழைப்பழத் தோலை வெச்சு வழுக்கி விழ வைப்பாங்க. அதைத்தான் கொஞ்சம் மாத்தி, கோலிகுண்டா வெச்சு, ஹீரோவுக்கு விரிச்ச வலையில காமெடியன் வடிவேலு வழுக்கி விழற மாதிரி வெச்சிருந்தேன். படம் ஹிட்டாகி நல்லா போச்சு. ஒருநாள் வீட்ல டிவில புதுப்பட டிரெய்லர்ஸைப் பாத்துட்டு இருந்தேன். அப்ப ஒரு புது தெலுங்குப் படம். அதுல இந்த ‘வின்னர்’ கோலிகுண்டு காட்சிய அப்படியே மறுபடியும் காப்பி அடிச்சு வச்சிருத்தாங்க. அப்பறம்தான் காப்பி அடிக்கிறதுல உங்ககிட்ட யாரும் ஜெயிக்க முடியாது ‘என் தோல்வியை ஒத்துக்கிறேன்’ன்னு அதோட காப்பி அடிக்கிற வேலையை விட்டுட்டேன்.”
‘வின்னர்’ கதை கேட்டதும் ஓகே சொன்ன பிரசாந்த்
பிரசாந்த்: “நான் ‘ஸ்டார்’ படம் பண்ணிட்டு இருந்தப்போ ஷூட்டிங் ஸ்பாட்ல வந்து ‘வின்னர்’ படத்தோடு கதையைச் சொன்னார் பூபதி பாண்டியன். கேட்டவுடனே கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. என்னோட வசனம், வடிவேலு சாரோட வசனம் என எல்லாமே படிச்சுப் பார்த்து அப்பவே விழுந்து விழுந்து சிரிச்சேன். என்கிட்ட என்ன கதை சொன்னாங்களோ, அதைத்தான் அப்படியே படமாக எடுத்தாங்க.”
சுந்தர் சி: “சினிமால எனக்கு சீனியர் பிரசாந்த். நான் முதல் படம் பண்ணுவதற்குள்ள அவர் நிறையப் படங்கள் பண்ணிட்டார். யாரை வச்சு சினிமாவுக்கு வந்தாலும் திறமை இருந்தால்தான் ஜெயிக்க முடியும். பிரசாந்த் கிட்ட அந்தத் திறமை நிறைய இருக்கு. டான்ஸ், ஃபைட், நடிப்பு என எல்லாத் திறமையும் அவர்கிட்ட இருக்கு. முழுமையாகத் தன்னை தயார்ப்படுத்திக்கிட்டுத்தான் சினிமாவுக்கு வந்தார். பிரசாந்த் கமல் சார் மாதிரி. சினிமால இருக்க லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களையெல்லாம் ஆர்வமா கற்றுக்கொள்வார். சினிமா துறையில் கார்த்திக், பிரபுதேவா, விஷால், சித்தார்த் எனக்கு நெருக்கமானவர்கள். அதில் எனக்கு ரொம்ப ஸ்பெஷலானவர் பிரசாந்த்!”
ஒரிஜினல் நீலவேணி கிரண் இல்லை
சுந்தர் சி: “இந்தப் படத்துக்கு முதல்ல வேற ஒரு ஹீரோயின வச்சு ஷூட் பண்ணிட்டோம். ‘மத்தாப்பு’ பாட்ல இடையில வர்ற சிவப்பு கலர் ட்ரெஸ் போட்ட பெண்தான் முதல் ஹீரோயின். அவங்க பாதியிலே படத்துல நடக்காம போயிட்டாங்க. அதுக்குப் பதிலாக அப்போ ‘ஜெமினி’ படத்துல நடிச்சு பிரபலமாக இருந்த கிரணை வச்சு படம் எடுத்தோம். அந்தப் பாடலையும் கிரணை மட்டும் வச்சு ஸ்டுடியோல தனியா எடுத்தோம். கிரண் உண்மையான நீலவேணி இல்ல.”
வடிவேலு – சுந்தர் சி காம்போ
சுந்தர் சி: “‘வின்னர்’தான் எங்களுக்கு முதல் படம். அதுலதான் நானும் வடிவேலு சாரும் முதன்முதலாக சேர்ந்தது. கைப்புள்ள கேரக்டர் எழுதும்போதே வடிவேல் சாரை மனசில வச்சுதான் எழுதுனேன். அதுக்கு பிறகு நானும், அவரும் சேர்ந்து நிறைய படங்கள் பண்ணிட்டோம். எங்க காம்போ நல்லா ஹிட்டாகுது.”
GOAT: விஜய் – பிரபுதேவா – பிரசாந்த் டான்ஸ்
சுந்தர் சி: “இப்போதான் அந்தப் பாடலைப் பார்த்தேன். மூணு பேருமே செம்மையா ஆடியிருக்காங்க. மூணு பேரும் தனித்துவமாக அவங்க ஸ்டைல்ல ஆடியது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஒரு நடிகர் தன்னோடு தனித்துவமான ஸ்டைல்ல அப்படியே வச்சிருக்கிறது ரொம்ப முக்கியம். அதை அவங்க ரொம்ப நல்லா பண்ணியிருந்தாங்க.”
பிரசாந்த்: “நாங்க மூணு பேரும் போட்டிப்போட்டு ஆடல. ரொம்ப கஷ்டப்பட்டும் ஆடல. சந்தோஷமா அந்தத் தருணத்த எஞ்சாய் பண்ணி ஆடினோம். விஜய் கூட சேர்ந்து நடிச்சிருக்கேன். படம் நல்லா வந்திருக்கு. என்னோட ‘அந்தகன்’ படமும் திரைக்கு வரப்போகுது. அதுவும் எல்லாருக்கும் பிடிக்கும். இன்னும் தொடர்ச்சியாகப் படங்களில் நடிப்பேன்.”