நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வெற்றி பெறுவது அவசியம். அவ்வாறு செய்யாவிட்டால் மதச்சார்பின்மை கேள்விக்குறியாகிவிடும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது என்பது பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பது, எனவே நேரடியாக பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதே நல்லது. எனவே, பா.ஜ.க-வுக்கும் வாக்களிக்காதீர்கள், திரிணாமுல் கட்சிக்கும் வாக்களிக்காதீர்கள். காங்கிரஸுக்கே வாக்கு செலுத்துங்கள்” எனப் பேசியதாக ஒரு வீடியோ வைரலானது.
இந்த வீடியோ குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், “நான் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை. ஒருவேளை அவர் அப்படி கூறியிருந்தால், எந்த சூழலில் அவர் இதைச் சொன்னார் என்றும் தெரியவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு நோக்கம் மட்டுமே உள்ளது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அது 2019-ல் பா.ஜ.க பெற்ற இடங்களை பாதிக்கும் குறைவாக குறைக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.