ஹைதராபாத்: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தெலங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த தற்காலிக தடை இன்று (மே 1) இரவு 8 மணி முதல் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களில் காங்கிரஸ் கட்சி குறித்து இழிவான வகையில் சந்திரசேகர ராவ் கருத்து தெரிவித்ததாக தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ஜி நிரஞ்சன் சில தினங்கள் முன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது சந்திரசேகர ராவ் பிரச்சாரம் செய்யத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் தனது உத்தரவில், “தேர்தல் நடத்தை விதிகளை மீறி, ஏப்ரல் 5, 2024 அன்று சிர்சில்லாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது சந்திரசேகர ராவ் வெளியிட்ட அவதூறான கருத்துக்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, அவரின் தவறான நடத்தைக்காக சந்திரசேகர் ராவை பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது.” என்று கூறியுள்ளது.
அரசியல் சாசனத்தின் 324வது பிரிவை மேற்கோள்காட்டி, இன்று இரவு 8 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்துக்கு சந்திரசேகர ராவ் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், நேர்காணல்கள், ஊடகங்களில் பேசக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.