Chennai Super Kings vs Punjab Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையான இன்றைய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீதம் உள்ள அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. மேலும் இந்த போட்டியில் பத்திரானா மற்றும் துஷார் தேஷ்பாண்டே காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ரிச்சர்ட் க்ளீசன் அணியில் இடம் பெற்றார்.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர் பிளேயில் விக்கெட் விழாமல் விளையாடியது, ஆனாலும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்க தவறியது. பிட்ச் மிகவும் மெதுவாக இருந்ததால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க சிரமப்பட்டனர். ரகானே 24 பந்துகளில் 29 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு களமிறங்க சிவம் துபே முதல் பந்திலயே அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். மேலும் ரவீந்திர ஜடேஜாவும் 4 பந்துகளில் 2 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய சமீர் ரிஸ்வி 23 பந்துகளில் 21 ரன்கள் அடித்தார். ஒருபுறம் விக்கெட்கள் விழுந்தாலும் மறுபுறம் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். 48 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள், ஐந்து பவுண்டரிகள் உட்பட 62 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.
பின்பு களமிறங்கிய தோனி 11 பந்துகளில் 14 ரன்கள் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் ராகுல் சஹார் இரண்டு விக்கெட்களையும், ஹர்ப்ரீத் ப்ரார் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர். எளிதான இலக்கை எதிர்த்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. இருப்பினும், பிரப்சிம்ரன் சிங் 13 ரன்களுக்கு ரிச்சர்ட் க்ளீசன் பந்தில் ஆட்டமிழந்தார். பின்பு ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ரிலீ ரோசோவ் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஜானி பேர்ஸ்டோவ் 30 பந்துகளில் 46 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக ஆடி வந்த ரிலீ ரோசோவ் 43 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் 163 ரன்கள் அடித்து இந்த போட்டியில் வெற்றி பெற்றது.