‛ஆனந்த ராகம்…' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
சென்னை அடையாறு பகுதியில் வசித்து வந்த உமா ரமணன் கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்னையால் அவதிப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவரது இல்லத்திலேயே இரவு 9:30 மணியளவில் இன்று(மே 1) காலமானார்.
நிழல்கள் படத்தில் பூங்கதவே தாழ் திறவாய் பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான உமா, தொடர்ந்து இளையராஜா இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி உள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட வெகு சில இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினாலும் பெரும்பாலும் இளையராஜா இசையில் தான் அதிக பாடல்கள் பாடி உள்ளார். அவரது இசையில் மட்டும் கிட்டத்தட்ட 100 பாடல்களை பாடி உள்ளார்.
சினிமா தவிர்த்து கணவர் ரமணன் உடன் இணைந்து ஆயிரணக்கணக்கான மேடை பாடல்கள் பாடி உள்ளார். இவரது கணவர் ஏவி ரமணனும் இசை துறையை சார்ந்தவர் தான். இவரும் பாடல்கள் பாடி உள்ளார். நிறைய படங்களில் குணச்சித்ர வேடங்களிலும் நடித்துள்ளார்.
உமா ரமணனின் மறைவு இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறுகிறது. உமா ரமணனின் மறைவுக்கு இசை ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உமா ரமணன் பாடிய சில சூப்பர் ஹிட் பாடல்கள்…
01. பூங்கதவே தாழ் திறவாய்… – நிழல்கள்
02. ஆனந்த ராகம்… – பன்னீர் புஷ்பங்கள்
03. பூபாளம் இசைக்கும்… – தூரல் நின்னு போச்சு
04. செவ்வந்தி பூக்களில் செய்த வீடு… – மெல்ல பேசுங்கள்
05. கஸ்தூரி மானே… – புதுமைப் பெண்
06. நீ பாதி நான் பாதி… – கேளடி கண்மணி
07. ஆகாய வெண்ணிலாவே… – அரங்கேற்ற வேளை
08. பொன் மானே கோபம் ஏனோ… – ஒரு கைதியின் டைரி
09. கண்மணி நீ வர காத்திருந்தேன் – தென்றலே என்னை தொடு
10. ராக்கோழி கூவையில… ஒரு தாயின் சபதம்
11. ஏலேழம் குயிலே… – பாண்டி நாட்டு தங்கம்
12. பூத்து பூத்து குலுங்குதடி… கும்பக்கரை தங்கையா
13. பூங்காற்று இங்கே வந்து… வால்டர் வெற்றிவேல்
14. வெள்ளி நிலவே வெள்ளி நிலவே… – நந்தவன தேரு
15. கண்ணும் கண்ணும் தான்… – திருப்பாச்சி