புதுடெல்லி: டெல்லி மற்றும் தேசிய புறநகர் மண்டலத்தில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் பிஹார் ராஜ்பவனுக்கு நேற்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த இ-மெயில் ரஷ்யாவில் இருந்து அனுப்பப்பட்டதாக டெல்லி போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
இ-மெயில் மூலம் குண்டு வெடிப்பு மிரட்டல் விடுப்பது கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. விமான நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நேற்று முன்தினம் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலம் ஆகிய இடங்களில் 80-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நேற்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பீதி ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள பள்ளிகளில் போலீஸார் நடத்திய சோதனையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும் புரளி என போலீஸார் தெரிவித்தனர்.
எனினும், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டதாக டெல்லி காவல்துறை துணை ஆணையர் கேபிஎஸ் மல்கோத்ரா தெரிவித்தார்.
டெல்லி தீயணைப்புத்துறைக்கு நேற்று காலை 6 மணியிலிருந்து, பல்வேறு பள்ளிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தல் அழைப்புகள் வந்ததாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் மல்கோத்ரா கூறினார்.
இந்த மிரட்டல் இ-மெயில்களின் ஐ.பி. முகவரியை கண்டுபிடித்துள்ளதாக டெல்லி சைபர் குற்றப்பிரிவு போலீஸார் கூறினர். டெல்லியில் பீதி ஏற்படுத்துவதற்காக ரஷ்யாவில் இருந்து இந்த மிரட்டல் இ-மெயில்கள் வந்துள்ளன.
இதுகுறித்து டெல்லி கல்வி அமைச்சர் ஆதிஷி எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘பெற்றோர் பீதியடைய வேண்டாம். சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அங்கு டெல்லி போலீஸார் சோதனை நடத்தினர். ஆனால், எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. போலீஸ் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் நாங்கள் தொடர்பில் உள்ளோம். பெற்றோர் பீதியடைய வேண்டாம்” என தெரிவித்திருந்தார்.
டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா விடுத்துள்ள செய்தியில், “மிரட்டல் இ-மெயில்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை டெல்லி போலீஸார் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றவாளிகள் கடும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது” என்றார். வெடிகுண்டு மிரட்டல் அனைத்தும் புரளிபோல் தெரிகிறது. இதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகமும் தெரிவித்தது.
பிஹார் ராஜ்பவனுக்கும் மிரட்டல்: பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இங்கு போலீஸார் நடத்திய சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. இந்த மிரட்டல் வெறும் புரளி என சீனியர் எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்தார்.