இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், கௌதம்மேனன், லிங்குசாமி, சுந்தர்.சி, லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ் வரிசையில் இப்போது நெல்சன் திலீப்குமாரும் இணைந்துவிட்டார். `ஃபிளெமென்ட் பிக்சர்ஸ்’ (Filament Pictures) என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். அதன் முதல் தயாரிப்பு குறித்த அறிவிப்பை நாளை அறிவிக்கிறார்.
நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன். அதன்பின் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, விஜய்யின் ‘பீஸ்ட்’, ரஜினியின் ‘ஜெயிலர்’ என டாப் ஹீரோக்களின் படங்களை இயக்கினார். ‘ஜெயிலர்’ படத்தின் தாறுமாறான வெற்றியால், இப்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகளில் இருக்கிறார் அவர். இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார் அவர்.
“என்னோட 20 வயதிலிருந்து பொழுதுபோக்குத்துறையில் பயணிக்கிறேன். இத்தனை ஆண்டுகளில் இந்தத் துறையில் ஏற்ற இறக்கங்களையும் பார்த்துவிட்டேன். என்னோட தயாரிப்பு நிறுவனமான ‘ஃபிளெமென்ட் பிக்சர்ஸ்’-இன் முதல் தயாரிப்பை அறிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக எனது முதல் தயாரிப்பை அறிவிக்கிறேன்” எனச் சொல்லியிருந்தார்.
அவரது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் பட அறிவிப்பு நாளை வெளியாகவிருக்கிறது. அது குறித்து கோடம்பாக்கத்தில் விசாரித்ததில் கிடைத்த தகவல் இங்கே…
“நெல்சனின் குட்புக்கில் பல ஆண்டுகளாகவே நடிகர் கவின் இருக்கிறார். அவர் இயக்கிய படங்களிலும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு. அந்த நட்பினால் இப்போது கவினை வைத்து ஒரு படத்தைத் தயாரித்துள்ளார் நெல்சன். இந்தப் படத்தை நெல்சனின் உதவியாளர் சிவபாலன் இயக்கியிருக்கிறார் என்றும், இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி கதை இது என்றும் சொல்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்னரே இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிட்டது என்ற பேச்சும் இருக்கிறது. ‘டாடா’ படத்தின் இசையமைப்பாளர் ஜென் மார்ட்டீன் இதற்கும் இசையமைத்துள்ளார். இது தவிர, இரண்டாவதாக தயாரிக்கும் படத்திற்கான கதையையும் நெல்சன் கேட்டு வருகிறார்” என்றும் சொல்கிறார்கள்.
வாழ்த்துகள் தயாரிப்பாளர் நெல்சன்!