மாட்ரிட்,
களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், 5 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 5-7, 4-6 என்ற நேர் செட் கணக்கில் 31-ம் நிலை வீரர் ஜிரி லெஹக்காவிடம் (செக்குடியரசு) தோற்று வெளியேறினார். அடிக்கடி காயத்தால் அவதிப்படும் 37 வயதான நடாலால் முன்பு போல் விளையாட முடியவில்லை. இதனால் விரைவில் ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் மாட்ரிட் ஓபனில் அவர் பங்கேற்றது இதுவே கடைசி முறையாகும். உள்ளூர் ரசிகர்கள் முன் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நடால், ’21 ஆண்டுகள் நான் இங்கு விளையாடி இருக்கிறேன். ஒரு காலத்தில் மாட்ரிட் ஓபன் எனக்கு கிராண்ட்ஸ்லாம் போட்டியை விட மிகவும் முக்கியமானதாக இருந்தது. இங்கு பெற்ற வெற்றிகள், அனுபவம், ரசிகர்களிடம் கிடைத்த ஆதரவு எனது வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத நினைவாக நிலைத்து நிற்கும்’ என்று கூறினார். நடால் அடுத்து பிரெஞ்சு ஓபனுக்கு முன்பாக இத்தாலி ஓபனில் விளையாட உள்ளார்.
மாட்ரிட் ஓபன் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் போட்டித் தரநிலையில் முதலிடம் வகித்த இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இவர்களை செபாஸ்டியன் கோர்டா (அமெரிக்கா)- ஜோர்டான் தாம்சன் (ஆஸ்திரேலியா) இணை 7-6 (7-4), 7-5 என்ற என்ற நேர் செட்டில் தோற்கடித்தது.