ICC T20 World Cup 2024 Full Schedule: டி20 உலகக் கோப்பை 2024 இன்னும் ஒரு மாதத்தில் தொடங்குகிறது. ஜூன் 2 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியை ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிராக விளையாடுகிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இதில் சில ரசிகர்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும், பலரும் இது சிறந்த அணி தான் என்று தெரிவித்துள்ளனர். ரிங்கு சிங், சுப்மான் கில் போன்ற வீரர்கள் அணியில் இடம் பெறவில்லை. அவர்கள் காத்திருப்பு பட்டியலில் தற்போது உள்ளனர். ரோஹித் சர்மா தலைமையில் மூத்த வீரர் விராட் கோலியும் அணி இடம்பெற்றுள்ளார்.
தற்போது ஃபார்மில் இல்லாத ஹர்திக் பாண்டிய துணை கேப்டனாக இடம் பெற்றுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு யுஸ்வேந்திர சாஹல் டி20 அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் அணியில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா என நான்கு சுழல் வீச்சாளர்கள் உள்ளனர். இந்த பந்து வீச்சு எதிரணியை திணறடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றதில்லை. எனவே இந்த டி20 உலக கோப்பையை வெல்ல இந்தியா கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவின் டி20 உலகக் கோப்பை 2024 அட்டவணை:
இந்தியா vs அயர்லாந்து போட்டி ஜூன் 5 ஆம் தேதி புதன்கிழமை நியூயார்க்கில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ஜூன் 9 ஆம் தேதி ஞாயிறு நியூயார்க்கில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா vs USA போட்டி ஜூன் 12 ஆம் தேதி புதன்கிழமை நியூயார்க்கில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா vs கனடா போட்டி ஜூன் 15 ஆம் தேதி சனிக்கிழமை புளோரிடாவில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றால், ஜூன் 20, ஜூன் 22, ஜூன் 24 ஆகிய தேதிகளில் மற்ற அணிகளுடன் விளையாடுவார்கள்.
கிட்டத்தட்ட ஒரு மாதம் நடக்கும் டி20 உலக கோப்பையின் இறுதிப் போட்டி ஜூன் 29 அன்று நடைபெறுகிறது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024ல் பங்கேற்கும் அணிகள்:
இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, அமெரிக்கா, நமீபியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், கனடா, ஸ்காட்லாந்து, உகாண்டா, நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா, நேபாளம்.