இந்த ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர், வரும் ஜூன் 2-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இத்தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருக்கிறது.
உலகக்கோப்பைக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா,அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷதீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
பேக்கப் வீரர்கள்: சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹமது, ஆவேஷ் கான்.
சென்னை அணிக்காக அதிரடியாக ஆடி வரும் ஷிவம் துபே உலகக்கோப்பை அணியில் எடுக்கப்பட்டிருக்கிறார். அதேபோல, நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி 9 போட்டிகளில் அதிரடியாக 385 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சனும் இந்திய அணியில் எடுக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் ராஜஸ்தான் – ஹைதராபாத் அணிகளுக்கிடையான போட்டி இன்று நடைபெறுகிறது. இதற்காக ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விளையாட்டி மைதானத்தில் இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டியிருந்த சஞ்சு சாம்சனைப் பார்த்து, வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடி வெற்றியுடன் நாடு திரும்ப வேண்டும் என்று நெகிழ்ச்சியாக வாழ்த்தியுள்ளார் மைதானத்தைப் பராமரிக்கும் பணியாளர் ஒருவர்.
இதுகுறித்த காணொளியை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது ராஜஸ்தான் அணி. அதில் அப்பணியாளர் சஞ்சு சாம்சனிடம், “நீங்கள் இந்திய அணிக்கு தேர்வானது மகிழ்ச்சியளிக்கிறது. நம் நாட்டிற்காக விளையாடுங்கள். நீங்களும், நம் இந்திய அணி வீரர்களும் சிறப்பாக விளையாடி வெற்றியுடன் நாடு திரும்புங்கள். என்னுடைய வாழ்த்து, ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும். நிச்சயம் நீங்கள் சிறப்பாக விளையாடி வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்புவீர்கள்” என்று வாழ்த்திப் பேசியுள்ளார்.
இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.