தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 26-ம் தேதி கேரளா உள்ளிட்ட 88 மக்களவைத் தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ம் தேதி குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 94 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறவிருக்கிறது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலோடு, நான்கு மாநிலங்கள் சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்கின்றன. இதில், முதற்கட்ட வாக்குப்பதிவின்போதே சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மே 13-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இன்னொருபக்கம், நாடாளுமன்றத் தேர்தலின் 7-ம் கட்ட வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்பதால், பணப்பட்டுவாடாவைத் தடுக்க நாடு முழுவதும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில், ஆந்திராவின் கஜனாம்பள்ளி பகுதியில் இன்று ரூ.2,000 கோடி ரொக்கப் பணத்தை ஏற்றிவந்த நான்கு கன்டெய்னர் லாரிகளை, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அதிகாரிகள் மடக்கிப் பிடித்திருக்கின்றனர்.
இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில் இந்தப் பணம், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் கொச்சியிலிருந்து தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்துக்கு கொண்டுசெல்லப்படுகிறது என்று தெரியவந்திருக்கிறது.
ஒரு லாரியில் ரூ.500 கோடி என நான்கு லாரிகளில் மொத்தமாக ரூ.2,000 கோடி ஏற்றிவரப்பட்டிருக்கிறது. இருப்பினும், பறக்கும் படை அதிகாரிகளின் விசாரணையில் இந்தப் பணம் ஆர்.பி.ஐ பணம் என்று தெரியவந்ததையடுத்து அந்த கன்டெய்னர் லாரிகள் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.