டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. அமலாக்கத்துறை அனுப்பிய ஒன்பது சம்மன்களுக்கு அவர் பதிலளிக்காத நிலையில், கடந்த மார்ச் 20-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கெஜ்ரிவால், தான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, அமலாக்கத்துறையை நோக்கி பல கேள்விகளை முன்வைத்தார்.
‘மக்களவை பொதுத் தேர்தல் தொடங்குவதற்கு முன்பு கெஜ்ரிவாலை கைதுசெய்தது ஏன்?’ என்ற கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்பியது. மேலும், நீதிமன்ற நடைமுறைகளை மேற்கொள்ளாமல் ஒருவர்மீது கிரிமினல் நடவடிக்கைகளை அமலாக்கத்துறையால் எடுக்க முடியுமா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதியான திபங்கர் தத்தா, ‘கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நேரம் குறித்து பதிலளிக்க வேண்டும்’ என்று மத்திய அரசின் கூடுதல் அரசுத் தலைமை வழக்கறிஞர் எஸ்.வி.ராஜுவுக்கு உத்தரவிட்டார். அப்போது, ‘இந்த வழக்கில் பறிமுதல் நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. அப்படி ஏதாவது பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்றால், இந்த விவகாரத்தில் எந்தளவுக்கு கெஜ்ரிவால் ஈடுபட்டிருக்கிறார் என்பதைக் காண்பியுங்கள்’ என்றார் நீதிபதி.
இதே டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அதைக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், ‘மணீஷ் சிசோடியா வழக்கில் ஆதாரம் கண்டறியப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கிறார்கள். ஆனால், கெஜ்ரிவால் விவகாரத்தில் அப்படி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லையே’ என்று கூறியது.
வழக்கு விசாரணை தொடங்கப்பட்டதற்கும், கைது நடவடிக்கைக்கும் இடையே மிகப்பெரிய கால இடைவெளி ஏன் என்று விளக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால் ஆம் ஆத்மி கட்சியின் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை அதிஷி, சௌரப் பரத்வாஜ் உள்ளிட்ட தலைவர்கள் முன்னெடுத்துவருகிறார்கள். கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இப்போதும் தொடர்கிறார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறும் நேரத்தில், மக்களால் தேர்வுசெய்யப்பட்ட இரண்டு மாநிலங்களின் முதல்வர்கள் (ஹேமந்த் சோரன் – முன்னாள் முதல்வர்) சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலைப் போலவே ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனும் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரி 31-ம் தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
மக்களவைத் தேர்தலுக்கு தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைதுசெய்தது. கைது நடவடிக்கையைத் தொடர்ந்து முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
தன்னை அமலாக்கத்துறை கைதுசெய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படாததால், உச்ச நீதிமன்றத்தை ஹேமந்த் சோரன் அணுகியிருக்கிறார். இந்த வழக்கையும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா அமர்வுதான் விசாரிக்கிறது. அமலாக்கத்துறை மத்திய பா.ஜ.க அரசின் கைப்பாவையாக மாறி, தன் எஜமானின் உத்தரவுகளுக்கு ஏற்ப செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்திருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கும் கேள்விகளால் அமலாக்கத்துறைக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு அமலாக்கத்துறை என்ன விளக்கம் தரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்திருக்கிறது.