ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் ஜூன் 1ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற உள்ளது. ஜூன் 29ஆம் தேதி நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோஹித் சர்மாவும் (Rohit Sharma), துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் உள்ளிட்டோர் அடங்கிய 15 வீரர்கள் கொண்ட ஸ்குவாட் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கில், ரின்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் என நான்கு மாற்று வீரர்களும் அறிவிக்கப்பட்டனர்.
இதில் தொடர்ந்து பல்வேறு கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்தன. இந்த டி20 உலகக் கோப்பை ஸ்குவாடில் நடராஜன் நிச்சயம் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு மாற்று வீரர்கள் வரிசையில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அர்ஷ்தீப் சிங் மற்றும் கலீல் அகமது ஆகிய இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பிசிசிஐ தற்போது வாய்ப்பளித்திருக்கிறது. இது தனி விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட்…
இது ஒருபுறம் இருக்க, டி20 உலகக் கோப்பை அணி குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்ததால், இந்திய அணியின் (Team India) கேப்டன் ரோஹித் சர்மாவும், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் (Agit Agarkar) ஆகியோரும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் பல்வேறு கேள்விகளுக்கு இவர்கள் பதில் அளித்தனர். கேஎல் ராகுல் சேர்க்கப்படாததற்கான காரணம், 4 ஸ்பின்னர்கள் ஸ்குவாடில் இருப்பதற்கான காரணம், விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் என பல்வேறு விஷயங்களையும், பல்வேறு வீரர்கள் குறித்தும் பேசினர்.
அதில் விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட் மீதான விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு ரோஹித் சர்மா வாய்விட்டுச் சிரித்தார். அகர்கர் அதற்கு பதில் அளித்தார். “நாங்கள் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்தெல்லாம் பேசியது இல்லை. ஐபிஎல் தொடருக்கும், சர்வதேச தொடருக்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கிறது. உங்களுக்கு அனுபவம் தேவை. எங்கள் அணி சமமாக உள்ளது. ஐபிஎல் தொடரில் நடக்கும் நல்லதை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உலகக் கோப்பை அழுத்தம் என்பது வேறு” என்றார்.
நான்கு ஸ்பின்னர்கள் எதற்கு…?
மேலும், நான்கு ஸ்பின்னர்களில் ஆப் ஸ்பின்னர்கள் இல்லையே என்பது குறித்த கேள்விக்கு,”நாங்கள் ஆப் ஸ்பின்னரை சேர்ப்பது குறித்து பேசினாம். ஆனால் துரதிருஷ்டவசமாக வாஷிங்டன் சுந்தர் நிறைய போட்டிகளில் விளையாடவில்லை. அஸ்வின் மற்றும் அக்சர் படேல் இடையேதான் போட்டி இருந்தது. 2 இடதுகை ஸ்பின்னர்களை எடுக்க முடிவெடுத்தோம். அக்சர் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன் இருந்தே ஃபார்மில் உள்ளார், நன்றாக பந்துவீசுகிறார். இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடியுள்ளார். அனுபவம் வாய்ந்த வீரரும் கூட…” என ரோஹித் பதில் அளித்தார்.
முன்னதாக, நான்கு ஸ்பின்னர்களை எடுத்ததற்கான காரணத்தை ரோஹித் சர்மாவிடம் கேட்டபோது, “4 ஸ்பின்னர்கள் ஸ்குவாடில் வேண்டும் என நினைத்தேன். அந்த காரணத்தை இங்கே சொல்ல மாட்டேன். அமெரிக்காவில் போட்டி நடக்கும்போது உங்களுக்கே தெரியும்” என்றார். இருவரும் தொடர்ந்து பல கேள்விகளுக்கு பதில் அளித்தனர். டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை ஜூன் 5ஆம் தேதி எதிர்கொள்கிறது.