புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுச்சேரி: நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சிறுமி படுகொலை வழக்கில் புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

புதுவை முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன் (59), கருணாஸ் (19) ஆகியோரை கைது செய்தனர். ஒரு வாரத்திலேயே வழக்கு விசாரித்து தண்டனை வழங்கப்படும் என்று அப்போதைய துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்திருந்தார்.

இச்சம்பவத்தில் போலீஸார் செயல்பாடுகள் திருப்தியில்லை என சிறுமியின் பெற்றோர், டிஜிபியிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கடத்தல், அடைத்து வைத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை, சாட்சியத்தை அழித்தல், எஸ்சி – எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம், போக்சோ என 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் ரத்த ஆடைகள், சடலத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், கைரேகை தடங்கள், ஜிப்மர் நிர்வாகத்தின் உடல்கூறு பரிசோதனை அறிக்கை, டிஎன்ஏ அறிக்கை போன்றவையும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. வழக்கில் சுமார் 80 சாட்சிகளின் வாக்குமூலம் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

போக்சோ வழக்குகளில் 60 நாட்களில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கையில் முத்தியால்பேட்டை போலீஸார் இறங்கினர். சிறப்பு விசாரணை குழு எஸ்பி கலைவாணன், கிழக்கு எஸ்பி லட்சுமி சவுதன்யா, சிறப்பு அதிரடிப்படை எஸ்பி ஜிந்தா கோதண்டராமன், இன்ஸ்பெக்டர்கள் கணேஷ், கண்ணன், எஸ்ஐ சிவப்பிரகாசம் ஆகியோர் அடங்கிய குழுவினர் பணியாற்றி பல நூறு பக்ககங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை தயாரித்து டிஜிபி ஸ்ரீனிவாஸ் மூலம் சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து குற்றப்பத்திரிகை இணைய வழியில் போக்சோ நீதிமன்றத்துக்கு பதிவேற்றம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து எஸ்பி லட்சுமி மற்றும் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் இன்று மாலை போக்கோ நீதிமன்றத்துக்கு வந்து நீதிபதி சோபனா தேவியிடம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு எஸ்பி லட்சுமி சவுதன்யா கூறும்போது, “குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். அதை நீதிபதி ஏற்றுள்ளார். குற்றப்பத்திரிகை சுருக்கம் 15 பக்கம் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவை சில நூறு பக்கங்கள் இருக்கும்” என்று கூறினார்.

மேலும், இதுகுறித்து காவல் துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “குற்றப்பத்திரிகையானது சுமார் 500 பக்கம் இருந்தது. அதில் கைதானவர்கள் வாக்குமூலம், சாட்சிகள் விவரம் உள்ளிட்டவை இணைக்கப்பட்டிருக்கிறது” என்றனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்புக்கு வழங்கப்படும். அதனடிப்படையில் வழக்கு விசாரணை விரைவில் தொடங்கி விரைவாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.