பெங்களூரு: ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் களமிறங்கினார். கடந்த 26-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் வெளியாகின.
ஹாசன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்த வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் வீடு வீடாக விநியோகிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் 25 வயதான பெண் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் தொந்தரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரது வீட்டில் வேலை செய்த 48 வயதான பெண்ணும் புகார் அளித்ததால் பிரஜ்வல் மீதும், அவரது தந்தை ரேவண்ணா மீதும் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. அக்குழுவின் தலைவர் பி.கே.சிங், விசாரணைக்கு ஆஜராகுமாறு நேற்றுமுன்தினம் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால் பிரஜ்வல் ரேவண்ணா, தற்போது வெளியூரில் இருப்பதால் நேரில் ஆஜராக 7 நாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு தன் வழக்கறிஞர் மூலம் கோரினார்.
இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பியோடியதாக தகவல் வெளியானதால், முதல்வர் சித்தராமையா அவரது தூதரக பாஸ்போர்ட்டை முடக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், “பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒக்கலிகா வாக்கு வங்கிக்காக தேர்தல் முடியும் வரை பிரஜ்வல் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என கூறுவது தவறானது. சிறப்பு புலனாய்வு போலீஸார் அவரை குற்றவாளி என அறிவித்துள்ளனர். லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி விமான நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
பிரஜ்வல் ரேவண்ணா தனது எக்ஸ் பக்கத்தில், ”நான் தற்போது பெங்களூருவில் இல்லாததால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. எனது வழக்கறிஞர் மூலம் சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு தகவல் தெரிவித்து விட்டேன். வாய்மை விரைவில் வெல்லும்” என்று நேற்று முன்தினம் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஜெர்மனியில் உள்ள பிரஜ்வல் வரும் 15-ம் தேதி அங்கிருந்து கிளம்பி 16-ம் தேதி நள்ளிரவு பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வருகிறார். இதற்காக அவர் விமானப் பயணத்துக்கான முன்பதிவு செய்து டிக்கெட் எடுத்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.