அனந்தபூர்: ஆந்திராவில் போலீஸார் நேற்று நடத்திய வாகன சோதனையில், 4 கன்டெய்னர் லாரிகளில் ஹைதராபாத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.2,000 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் வரும் 13-ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
பொதுமக்களுக்கு அரசியல் கட்சிகள் சட்ட விரோதமாக பணம், பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பறக்கும் படைகள் மற்றும் பல இடங்களில் போலீஸார், ஐடி, வருவாய் அதிகாரிகள் என பலதரப்பட்ட குழுவினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, நேற்று அனந்தபூரில் பாமிடி எனும் இடத்தில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வரிசையாக வந்த 4 கன்டெய்னர்களை நிறுத்தி சோதனையிட்டதில், ஒவ்வொரு லாரியிலும் புத்தம் புதிய ரூ.500 நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கி வைத்திருப்பதை கண்டு ஆச்சர்யப்பட்டனர். ஒவ்வொரு கன்டெய்னரிலும் ரூ.500 கோடி வீதம் 4 கன்டெய்னர் லாரிகளில் ரூ.2,000 கோடி பணம் இருந்தது.
இது தொடர்பாக லாரி ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தியதில், இவை அனைத்தும் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து, ஹைதராபாத் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறினர். இதனை தொடர்ந்து ஐடி அதிகாரிகளுக்கு போலீஸார் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஐடி அதிகாரிகள் அந்த 4 லாரிகளையும் தங்களின் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கான ஆவணங்கள் சரியாக இருந்தால் லாரிகளை விட்டு விடுவதாக தெரிவித்தனர்.