மாடலிங்கில் தனது வாழ்க்கையைத் தொடங்கி தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிப்படங்களில் ஹீரோயினாக வலம் வந்து கொண்டு இருப்பவர், மெஹ்ரீன் பிர்ஸாடா. தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘பட்டாஸ்’, ‘நோட்டா’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 28 வயதாகும் மெஹ்ரீனுக்குத் திருமணமாகவில்லை.
சமீபத்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் மெஹ்ரீன். அதில், தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனது கருமுட்டைகளை உறைய வைத்திருப்பதாகவும், மருத்துவமனையில் அதற்கான செயல்முறையில் ஈடுபடுவது போன்ற வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
மேலும் தனது பதிவில், “இந்த முயற்சியை மேற்கொள்வதற்கு இரண்டு வருடங்களாக என்னை நானே மனதளவில் தயார்படுத்திக் கொண்டிருந்தேன். தனிப்பட்ட விஷயத்தை பகிர்வதா, வேண்டாமா என்று முதலில் யோசித்தேன். என்னைப் போன்று, திருமணம் குறித்து முடிவு செய்யாத பெண்களுக்காக இதைப் பகிர வேண்டும் என்று நினைத்தேன்.
குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் கனவு. சில ஆண்டுகள் தாமதிப்பதால் அதை இழக்க நான் விரும்பவில்லை. இந்த விஷயங்கள் குறித்து நாம் அதிகம் பேசுவதில்லை. தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேம்பட்ட முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளபோது அதைத் தவறவிட வேண்டாம்.
எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்புள்ள (குழந்தையின்மை) பிரச்னைகளைத் தவிர்க்க விரும்பும் பெண்களும், இது போன்ற முயற்சியை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ, அதை உங்களுக்காகச் செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
கரு முட்டையை உறைய வைப்பதை மருத்துவ மொழியில் ‘ஓசைட் கிரையோபிரிசர்வேஷன்’ (Oocyte cryopreservation) என்று அறியப்படுகிறது. இம்முறையில், பெண்களுக்கு ஹார்மோனைத் தூண்டுவதற்காக தொடர்ச்சியாக 8 முதல் 11 நாள்கள் ஊசி போடப்படும். இதனால், கருமுட்டையானது வேகமாக வளர்ச்சி அடையும்.
ஊசியின் மூலம் வளர்ச்சி அடைந்த கரு முட்டை, பெண்ணுறுப்பு வழியாக வெளியே எடுக்கப்படும். வெளியே எடுக்கப்பட்ட கருமுட்டைகள் குறைந்த வெப்பநிலையில் திரவ நைட்ரஜனில் உறைய வைக்கப்படும். கருமுட்டையின் தன்மையைப் பொறுத்து பல ஆண்டுகள் வரை பாதுகாத்து வைத்துக்கொள்ள முடியும். பின் தேவைப்படும்போது உறைந்த கருமுட்டையை கருவுறுதல் நடைமுறைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
புற்றுநோய்க்காக கீமோதெரபி சிகிச்சையை மேற்கொள்ளும் பெண்கள், கருப்பை நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், முன்னேற்பாடாக அவர்களின் சம்மதத்தின் பேரில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.