சென்னை: “வறட்சியால் கோடிக்கணக்கான தென்னை மரங்கள் கருகி வருகின்றன. விவசாயிகளின் துயரைத் துடைக்க மரத்துக்கு ரூ.10,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு வாட்டும் வெப்பநிலை மற்றும் வறட்சியால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 2.5 கோடி தென்னை மரங்கள் கருகி வருகின்றன. ஆயிரக்கணக்கில் செலவழித்தும் தென்னை மரங்களைக் காப்பாற்ற முடியாத நிலையில், விவசாயிகளின் துயரைத் துடைக்க தமிழக அரசு எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கதாகும்.
கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை, கிணத்துக் கடவு உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மட்டும் 2.5 கோடிக்கும் கூடுதலான தென்னை மரங்கள் உள்ளன. ஆனால், கடுமையான வறட்சி காரணமாகவும், கடந்த சில வாரங்களாக வாட்டி வதைக்கும் வெப்பம் காரணமாகவும் இந்த மரங்கள் கருகத் தொடங்கியுள்ளது.
பாசன ஆதாரங்கள் அனைத்தும் வறண்டு விட்ட மட்டுமின்றி, நிலத்தடி நீர் மட்டமும் அதலபாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில், சரக்குந்துகள் மூலம் தண்ணீர் வாங்கி வந்து தென்னை மரங்களுக்கு பாய்ச்சும் நிலைக்கு கொங்கு மண்டல விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு மரத்துக்கு ஒரு நாளைக்கு குறைந்து 40 லிட்டர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு மரத்துக்கு ஒரு நாளைக்கு தண்ணீர் பாய்ச்ச ரூ.10 முதல் 13 வரை செலவாகும்.
1000 தென்னை மரங்களை வைத்துள்ள விவசாயி, அவற்றுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஒரு மாதத்துக்கு ரூ.4.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை செலவழிக்க வேண்டியிருக்கும். பெரும்பான்மையான விவசாயிகளுக்கு இது சாத்தியம் இல்லை. அதனால், பெரும்பான்மையான மரங்களைக் காப்பாற்ற முடியவில்லை. மொத்த மரங்களில் ஒன்றரை கோடிக்கும் கூடுதலான மரங்களை வறட்சியிலிருந்து காப்பாற்ற முடியாது என விவசாயிகள் கூறுகின்றனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி விற்பனை செய்வதன் மூலம் மரத்துக்கு ரூ.3,000 வரை கிடைக்கும். ஆனால், இப்போது வறட்சியால் தென்னை மரங்கள் வலுவிழந்து விட்டதால் அவற்றை கட்டுமானப் பயன்பாட்டுக்கு வாங்குவதற்கு மர ஆலைகள் முன்வரவில்லை.
இதனால், விவசாயிகளுக்கு மிகக்கடுமையான இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கொங்கு மண்டலத்தில் மட்டுமின்றி காவிரி பாசன மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் இதே நிலை தான் காணப்படுகிறது. தென்னை மரங்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வரும் போதிலும், அதற்கான நிபந்தனைகள் நடைமுறை சாத்தியமற்றவை என்பதால் பெரும்பான்மையான விவசாயிகள் தங்களின் தென்னை மரங்களை காப்பீடு செய்யவில்லை.
தென்னை சாகுபடிக்காக கடன் வாங்கி பெருமளவில் விவசாயிகள் முதலீடு செய்துள்ள நிலையில், வறட்சியால் தென்னை மரங்கள் கருகுவதால் ஏற்படும் பாதிப்புகளை அவர்களால் தாங்க முடியாது. மீளமுடியாத கடன் சுமையில் அவர்கள் சிக்குவர்.
தமிழ்நாட்டில் நிலவும் வறட்சியால் மா, தென்னை, பப்பாளி உள்ளிட்ட அனைத்து பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் தமிழ்நாட்டில் நீர்ப்பாசனத் திட்டங்கள் போதிய அளவில் செயல்படுத்தப்படாதது தான். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கும் அதிகமாகவே மழை பெய்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளின் வாயிலாக மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 150 டி.எம்.சி முதல் 200 டி.எம்.சி வரையிலான தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்டுதல், ஒரு பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட பாசன ஆதாரங்களை இணைத்தல், நிலத்தடி நீர்மட்டத்தை செறிவூட்டுவதற்கான திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்றவற்றின் மூலம் வறட்சியை முழுமையாக தடுக்க முடியாவிட்டாலும் அதன் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.
அதை செய்ய கடந்தகால மற்றும் நிகழ்கால ஆட்சியாளர்கள் தவறி விட்ட நிலையில், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். விவசாயிகளின் துயரத்தை தற்காலிகமாக தீர்க்கும் வகையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு ஒரு மரத்துக்கு ரூ.10,000 வீதம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
இனி வரும் காலங்களில் இத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க நீர் மேலாண்மைத் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.