"பழங்கால ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க நிதி வழங்க வேண்டும்!" – ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்

தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உள்ள ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க அளிக்கப்படும் நிதியைத் தொடர்ந்து வழங்க வலியுறுத்தி மத்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு இயக்கத்தின் இயக்குநருக்கு விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார், கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அதில், “தேசிய ஓலைச்சுவடிகள் இயக்கத்துடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம், அக்டோபர் 2018-ல் ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு மையத்தை நிறுவியது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள் துறையில் 8000 பனை ஓலைச் சுவடிகளும் (தமிழ் மற்றும் பிற மொழிகளில்) மற்றும் 7200 வருவாய் பதிவுகள் கொண்ட ஓலைச் சுவடிகளும் உள்ளன. டிசம்பர் 2023க்குள், 3438 ஓலைச் சுவடிகளையும் 14 வருவாய் பதிவுகள் கொண்ட ஓலைச் சுவடிகளையும் அந்த மையம் வெற்றிகரமாகப் பாதுகாத்தது.

ஓலைச் சுவடி

இருப்பினும், சுமார் 11,000 ஓலைச் சுவடிகளுக்கு இன்னும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருக்கின்றன. கோயில்கள், மடங்கள் மற்றும் பிற நிறுவனங்களிலிருந்தும் கிராமப்புறங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான ஓலைச் சுவடிகளைச் சேகரித்து, அந்த ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கவும் ஓலைச் சுவடிகள் துறை உத்தேசித்துள்ளது. தேசிய ஓலைச்சுவடிகள் இயக்கம் 2019 முதல் 2022 வரை ரூ.16,03,998, அளித்தது. அதன் பின்னர் நிதிநல்கை நிறுத்தப்பட்டுள்ளது.

ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு மையத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் தொடர்ந்து நிதிநல்கை கிடைக்கும் என நம்பி ஜனவரி 2024 வரை பணிபுரிந்தனர். நிதிநல்கை கிடைக்காததால், பணிகள் நிறுத்தப்பட்டன. அவர்கள் வேலைக்கு வருவதும் நின்றுவிட்டது. இப்போது அந்த மையத்தின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. தேசிய ஓலைச்சுவடிகள் இயக்கம் வழங்கிய சராசரி நிதிநல்கை ஆண்டுக்கு 3.30 லட்சம்தான். ஓலைச்சுவடிகளின் மதிப்பைக் கருத்தில் கொண்டு பார்த்தால், மிகவும் சிறிய தொகையாகும்.

ரவிக்குமார் எம்.பி

ஓலைச் சுவடிகள் பாதுகாப்புப் பணிகளைத் தொடரவும், தமிழ்ப் பல்கலைக்கழகத்திலுள்ள ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு மையத்தைத் தொடர்ந்து நடத்திடப் பல்கலைக்கழகத்திற்கு உதவிடவும், உரிய நேரத்தில் நிதிநல்கையை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கடிதம் மூலம் வலியுறுத்தி இருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.